Tuesday, December 30, 2025

எட்டினால் எட்டுவது

 காலம் என்பதன் கருப்பொருள் அவனே

ஞாலத்தின் ஆதியும் அந்தமும் அவனே

காலத்தின் ஓர் துமி ஓராண்டெனவே

காலக் கணக்கன் ஏட்டினில் கழிந்ததே

கோலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

பால் வண்ணக் கடலில் துயில்கின்ற உத்தமன்

மாலவன் மாதவன் மாயவன் தூயவன்

 நாலிரண்டும் நவில நிலைக்கும் நற்பேறே


எட்டிலே எட்டாத பொருள் இங்கு எதுவும்

எட்டிலே தேடியும் எங்குமே இல்லை

எட்டையே எட்டிய சித்தர் தமக்கும்

எட்டால் எட்டுவது எட்டாது அன்றோ

Saturday, December 27, 2025

விசுவாவசுவே வருக

 புத்தாண்டாய் வரும் விசுவாவசுவே

முத்தாய்ப்பாய் வா சோதனைகட்கு

பத்திரிகை தரும மெனும் அருஞ் 

சொல் லிங்கே

புத்துயிர் பெற்றே மீண்டும் துளிர்க்க

நித்தமும் அறமது தழைத்து நிலைக்க

மொத்தமாய்க் கொட்டாது வாழவே மழை வர

கொத்துக் கொத்தாக நெற்கதிர் விளைய

அத்தனை பஞ்சமும் இல்லாது போக

குத்திக் கிழிக்கும் குற்றங்க ளின்றி

தித்திக்கும் நல்ல செய்திகள் தருவாய்

பித்தாய் அலையும் பயங்கரவாதம்

மொத்துண் டழிந்து காணாமல் போக

நித்தமொரு சொல்லால் மக்களைக் குத்தும்

தத்துவம் அறியாப் புல்லர்க ளொழிய

சத்தான ஆள்வோர் பாரது தன்னில்

முத்தாக முடிவெடுத் தின்பமது பெருக

அத்திப்பூப் போலொரு அரசன் உள்ளான்

பத்தாண்டு மேலுமவன் ஆட்சியது தொடர

எத்திக்கும் எங்கள் பாரதம் ஒளிர

இத்தனை வேண்டுதல் உன்முன் வைத்தேன்

புத்தாண்டாய் வரும் விசுவாவசுவே

முத்தாய்ப்பாய் வா சோதனைகட்கு

Thursday, July 31, 2025

 This one's for her 60th birthday


கேரளமே இவள் தேசம்; மலப்புரமே இவளூராம்

ஓரளவே மலையாளம்; கொஞ்சு தமிழ் இவள் மொழியாம்

பேரன்பே இவளியல்பு; தாய்மைக்கோர் இலக்கணமாம்

சேரத்தின் கோவிலகம் மரபில் ஓர் திருமகளாம்

பேரிலுள்ள சீலமது வாழ்வினிலே நடைமுறையாம்

கார்மேகம் காதலிலே; கனிந்தென்னை நோக்கினளே

ஓருயிராய்க் கலந்ததனால் இல்வாழ்வு காவியமாம்

ஈரைந்து ஆறாக ஆண்டுகள்தாம் நிறைந்தனவே                             பேரொளியாய் வந்தவளே பேரின்பம் தந்தவளே

நாரணன்தன் அருளாலே நூறாண்டு வாழ்ந்திடுக



தூணிலும் துரும்பிலும் இருப்பதோர் சக்தி

ஆணையும் பெண்ணையும் படைத்ததோர் சக்தி

காணுதற் கரிதாம் கண்டவர் வசமாம்

பேணுவது அதுவே பிறப்பிப் பததுவே

கோணாத கோலும் பிழைக்கின்ற போது

நாணாது மறத்தை அழிப்பது மதுவே

ஆண்டவன் என்றும் அருள்பவன் என்றும்

ஈண்டிங்கு பலதாம் பெயர் கொண்ட ழைப்பார்

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பென

யாண்டும் சக்கரம் சுழல்வது அதனால்

காண்மின் காண்மின் அதனின் ஓர் துமியை

மாண்பினை வியந்தோம் சிறிதாய் உணர்ந்தோம்





மீண்டும் பிறந்தேன் உன்னால் நிறைந்தேன்


மீண்டும் பிறந்தேன் அம்பிகை சொல்லால்

மண்ணிலே சொர்க்கம் கண்டு மீள்கென்றாள்

விண்ணி லன்றோ அதுவென வியந்தேன்

தண்ணிலவு நீ வர உண்மை உணர்ந்தேன்

எண்ணில் அடங்கா அனுபவ ங்களுண்டு

எண்ணின் திகட்டாத அமுதக் கணங்கள்

பண்ணென இனிதாய் வாழ்க்கை நகர

யாண்டும் மணக்கும் காவிய இல்லறம்

பண்டு வள்ளுவன் புகழ்ந்த நல்லறம்

வேண்டிய படியே கிட்டிய வரமே

நீண்ட பயணத்தின் சாரதி ஆனாய்

வேண்டேன் பிறவி உன்னால் நிறைந்தேன்

 மாசில்லாத் தமிழ் கூறும் மாண்பு மிக்கோர் சபையினிலே

ஈசனேதான் ஆனாலும் குற்றத்தை இடித்துரைக்கும்

நக்கீரன் வழி வந்தோர் இருப்பதுவும் ஓர் சிறப்பே

தக்கதோர் வழியாமே நம் தமிழை நாம் வளர்க்க



அறுபதைக் கடந்தாலும் தாடியது நரைத்தாலும்

கற்பதை நிறுத்தவில்லை

கல்வியது தொடர்கிறது

வயதறியாத் தமிழன்னை சாந்நித்யம் என் முன்னே

தயங்குகிற பாலகனாய்த் தவழ்கின்றேன் அவள் மடியில்

ஆத்திரங்கள் ஒன்றுமிரா; தயங்காமல் தவறுரைப்பீர்

நாத்தனார் மகனெனவே சாத்திரங்கள் பார்க்காதீர்




கண்ணனைப் பாடுமின் கண்ணனைப் பாடுமின்

நுண்ணிய பொருளினுள் நுண்மையாய் நிற்பவன்

எண்ணத்தில் உயர்வதைத் தருமமாய்ச் சொன்னவன்

கிண்ணத்தில் சோறிடின் குழந்தையாய் வருபவன்

திண்ணமாய் யோகத்தின் நெறியதைத் தந்தவன்

வண்ணமாய் அறந்தனைப் புரக்கவே பிறப்பவன்

அண்மையில் இருந்தும் காணுதற் கரியவன்

நண்பனாய் இருந்து அறிவுரை சொல்பவன்

தண்மையில் நிலவதன் ஒளிபோல் குளிர்பவன்

வண்மையில் தனக்கு நிக ரில்லாதவன்

கண்ணனைப் பாடுமின் கண்ணனைப் பாடுமின்




தூணிலும் துரும்பிலும் இருப்பதோர் சக்தி

ஆணையும் பெண்ணையும் படைத்ததோர் சக்தி

காணுதற் கரிதாம் கண்டவர் வசமாம்

பேணுவது அதுவே பிறப்பிப் பததுவே

கோணாத கோலும் பிழைக்கின்ற போது

நாணாது மறத்தை அழிப்பது மதுவே

ஆண்டவன் என்றும் அருள்பவன் என்றும்

ஈண்டிங்கு பலதாம் பெயர் கொண்ட ழைப்பார்

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பென

யாண்டும் சக்கரம் சுழல்வது அதனால்

காண்மின் காண்மின் அதனின் ஓர் துமியை

மாண்பினை வியந்தோம் சிறிதாய் உணர்ந்தோம்



கண்டதைச் சொன்னேன்  கடிந்தனர் மாக்கள்

உண்மையை ஆரே உவப்புடன் ஏற்பர்

கோமாளி எனவே கடந்து செல் கின்றார்

எமக் கொரு லாபமோ நட்டமோ இல்லை

இன்பமும் துன்பமும் அவரவர் விதியாம்

என் கடமை இங்கே மௌனமாய்க் காணல்

காண்கின்ற யாவும் விண்டுரைப் பதிங்கே

கண்ணன் ஒவ்வாச் செயலெனத் தெளிந்தேன்

நலமாய் வாழ்ந்து நீங்கிடும் வரையில்

உலகுண்ட வாயா! உள் நின் றொளிர்க!

Friday, April 12, 2024

 குரோதி ஆண்டே வருக வருக

குறைவின்றி இங்கே இன்பமே தருக

ஏர் பிடித்தோர் வாழ்வு வளமே பெறுக

பாரினில் அமைதி பாங்காய் நிலவுக

அரி போன்ற அரசன் எமை ஆள்கையிலே

நரிகள் கூட்டம் அஞ்சியே ஒளிக

தென்னாட்டில் தாமரை வெல்க மலர்க

பொன்னாட்டில் இல்லையென்ப தில்லாது ஒழிய

போர் எனும் சொல்லே பொருந்தாது போக

சீர் மிகு வாழ்வை அவனியோர் பெறுக

கார்வண்ணணன் இங்கே நிலை பெற்றருள்க

பாரதம் புவனம் தன்னிலே ஒளிர்க

குரோதி ஆண்டே வருக வருக

குறைவின்றி இங்கே இன்பமே தருக





கேரளமே இவள் தேசம்; மலப்புரமே இவளூராம்

ஓரளவே மலையாளம்; கொஞ்சு தமிழ் இவள் மொழியாம்

பேரளவில் நாயர் மகள்; வைணவர்தம் குலமகளாம்

சேரத்தின் கோவிலகம் மரபில் ஓர் திருமகளாம்

பேரிலுள்ள சீலமது வாழ்வினிலே நடைமுறையாம்

கார்மேகம் அன்பினிலே; கனிந்தென்னை நோக்கினளே

ஓருயிராய்க் கலந்ததனால் இல்வாழ்வு காவியமாம்

ஈரைந்து ஆறாக ஆண்டுகள்தாம் நிறைந்தனவே                             பேரொளியாய் வந்தவளே பேரின்பம் தந்தவளே

நாரணன்தன் அருளாலே நூறாண்டு வாழ்ந்திடுக