தாரமே தாயாய் இருந்திடில் வாழ்வில்
பாரமொன்றில்லை அறிந்தவர் அறிவர்
மூதுரை செப்பிய ஔவையின் ஞானம்
யாதுரை செய்யினும் முகிழ்த்திடும் முறுவல்
தீதொன்றிலாத அருள் நிறைச் சொற்கள்
பேதங்கள் இன்றியே பொங்கிடும் அன்பு
நான்முகன் தேவி கலைமகள் இவளோ
நான்மறை நாயகன் மார்புறை திருவோ
நான் முன் செய்த நல்வினைப் பயனோ
மானவள் எனக்குத் துணையென வந்தாள்
இல்வாழ்வென்பது நல்வாழ்வானது
இல்லாததொன்றும் இல்லையென்றானது
பாங்காய் இகத்தில் வாழ்கிறோம் கண்ணா!
நீங்கிடும்போதும் பிரியாதருள்வாய்!

