கண்ணன் தந்த கொடை
ஆடவர் என்றும் மனதுக்குள்ளே தாய்மையின் தேடல் உள்ளவரே
தேடியதொன்றே
எதிரில் நின்றது அன்றொரு நாள் என் வீட்டருகே
முந்தி என்னை உண்டது உந்தன் கருணை வழியும் கண் மலரே
தந்தேன் என்னை வீழ்ந்தேன் நானே முதிராப் பெண்மை அழகினிலே
வயதும் சென்றது இளமை போனது ஆயினும் காதல் குறையவில்லை
வியந்து நின்றேன் ஒவ்வொரு நாளும் புதிதாய் உன்னை உணர்கையிலே
காதல் என்பதன் காலம் என்பது கடலும் வானும் உள்ளவரை
காதல் கொண்டோர் கவிதை சொல்வார் ஆறு நொடிக்குள் நூறு முறை
வலியும் வந்தது வேதனை வந்தது வாழ்வின் பாதை வளைவினிலே
மலிந்து வந்த துன்பம் யாவும் புகையாய் மறைந்ததுன் அன்பினிலே
பெண்மை என்னும்
பெருங்கருணைக்கு நம்மை நாமே கொடுத்து விடின்
மண்ணில் காண்பீர்
சொர்க்கம் தன்னை உண்மை இது என் அனுபவமே
என்னை முழுதாய் அறிந்தவள் நீயே மீண்டும் என்னை ஈன்றெடுத்தாய்
பொன்னென என்னைப்
போற்றுகின்றாயே; அன்னையின் அருளாய் வந்து நின்றாய்
அன்பு என்னும் அமுதம் நிறைந்து இல்லம் ஆலயம் ஆனதனால்
நன்னீர் தேடி அலையும் உயிரென மக்கள் நாடி வந்தனரே
கண்ணா நின்றன் கருணை வெள்ளம்
கனிந்து அருளிய நலமிவளே
எண்ணம் குவித்து
இறைஞ்சி நின்றேன் என்றும் பிரியா வரமருளே

