Tuesday, August 7, 2012

என் கவிதைகள்


ஆண்டுகள் நொடிகளாய்.......

எண்ணம் போல் மணமுடித்தேன் எண்ணியவளைக் கரம் பிடித்தேன்
பண்டைய நல் வினை பல கோடி இருத்தல் வேண்டும் – இன்றேல்

நாடிய பலருக்கும் கிட்டாத உன் சுயம்வர மாலை
கோடியில் ஒருவனாய் எனக்குக் கிட்டியிருக்குமா

ஆண்டுகள் நொடிகளாகும் அற்புதம் கண்டேன்
வேண்டிய வாழ்க்கை வரமாய்க் கிட்டியதால்

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே துணையாய் வேண்டும்
சற்றும் பிரியாமல் கண்ணன் அருளல் வேண்டும்

பொருளே தாரம் என நானும் எண்ணியதில்லை
பொருளாதாரத்தைப் பற்றி மட்டும் நீயும் சிந்தித்ததில்லை

கோடிகள் நம்மிடம் இருந்ததில்லை; நம்மை
நாடி வந்தவர் வெறுமே சென்றதில்லை

பயமறியாமல் வாழ்க்கையை நான் வாழக் காரணம்
சுயமழித்து என்னை நீ முன்னிருத்தியதே

விடலையாய் இன்றும்  நான்  எண்ணி விகசிப்பது - என்
மடலை வாசித்து உன் சம்மதம் சொன்னதை

என் தேடலால்  நான் வேகம் கொண்ட போழ்தில்
அன்பென்ற கடிவாளம் கொண்டு வழி நடத்தினாய்

நண்பனாய் மந்திரியாய் என் வாழ்வின சாரதி நீ
கண் போல் வளர்த்த அன்னை; நல்லாசிரியை நீ

மோகம் என்னும் கங்கை என்னுள் பெருகும் அதன்
வேகத்தைக் காதலால் வாங்கும் சங்கரன் நீ

வாழ்வெனும் போர்க்களத்தில் நான்; மனம்
தாழ்வுறாமல் என்னை எனக்குணர்த்திய கண்ணன் நீ

காமத்திலிருந்து காதலுக்கு இட்டுச் செல்லும் சரஸ்வதீ
ஆம்; நீயே என் வாழ்வெனும் வேள்வித் தீ

என் கவிதைகள்:


இளமை:

ஐந்திலே ஓடியதும் ஆடியதுமொரு புகை போல் நினைவு; பத்து
ஐந்திலே பள்ளி சென்றதும் அறிவு விழித்ததும் – இருபத்து
ஐந்திலே உயிர்க்காதலும் உயர் கல்வியும் எதிரெதிராய் நின்றதும் – முப்பத்து
ஐந்திலே மூன்று ரத்தினங்க்ளுடன் வாழ்க்கைப் பெருங்கடல்; நாற்பத்து
ஐந்திலே திரவியம் தேடித் திரை கடலோட்டம் – ஐம்பத்து
ஐந்திலே இள்மையின் பொன்னந்தி மாலை ; எதிர் நிற்கும் பொறுப்புகள்எந்த
ஐந்திலும் என் மனதின் துள்ளலில் இருபத்தைந்தே 

கர்வம்:

இலக்கியம் அறிந்தவன் கவிதை செய்பவன்
உலகம் தெரிந்தவன் விவேகம் உள்ளவன்
பலரும் வந்து ஆலோசனை லேட்கும் அறிவு
நலத் திட்பம் வாய்ந்தவன்; நயமாய் உரைத்திடும்
சொலல் வல்லன்; அறியாததொன்றில்லை என என்னைப்
பலபடி வியந்தவாறு வான் நோக்கி நடந்தேன்;
பலரும் நகைக்கக் கீழே விழுந்தேன் சிறு கல் அறியாமல்

கடல் குளியல்:

என் மீது பாய்ந்து என்னை வீழ்த்தி முயங்கிச்
சட்டென்று பின் வாங்கி எதிர்பாராமல் மீண்டும்
மதர்த்தெழுந்து என் மீது படரும்
கடல் நிச்சயம் பெண்தான்

நான் :
நடக்க நடக்கத் தெரிந்தது நான் நடந்த் தூரம் குறைவெனறு
படிக்கப் படிக்கத் தெரிந்தது நான் அறிந்தது மிகக் குறைவென்று
கேள்விகளாய் என்னுள் மூழ்கி விடை கண்டு துடித்த வினாடி
என்னுள் என்னருகே நான் 

பாம்பதனைப் போலவே நாவில் விடமென்றுரைத்திட்டாள்
சோம்புதலின்றியே யாண்டும் அன்பு செய்யும் என்னை – பல்லுயிர்
ஓம்புதலின்றி வேறொன்றறியேன் என் மனையாள்
பூம்பொழில் சூழ் வேங்கடவா இவளை நீயே கேள்

சிலேடை: 
ஆதியில் உருவம் குறுகியதால் பின்னோர் நாள் 
ஆழி நீர் அருந்தியதால் மற்றாங்கே 
ஆலவாயன் தமிழால் புகழ் பெறலால்  
ஆங்கே குறு முனியோடொற்றாளவள்

கூறின், பொருளுடையோர் மாட்டே உலகு 
தேறின் , அருளும் அறனுடையோர் மாட்டே ;
கூற்றம் என்றும் அச்சமுடையோர் பால்; எதுவும் 
மாற்றம் என்றுணர்வார்க்கில்லை மரணம்

கல்லாதான் கண் உரைக்கும் அரும்பொருள் - மாண்பு 
இல்லாச் சிறியோர் ஈந்த இழி பொருள் ; கோல் செம்மை 
இல்லாக் காவலன் பால் செய்யும் சேவகம்; இவை மூன்றும் 
பொல்லா முன் வினையின் பயனே கேண்மின்

தருக்கே கொண்டு சினந்தொழுகுவார் தம் வாழ்வில் 
பருப்பொருள் என்றும் உணர்வுறார்; மறையுரைக்கும் 
கருப்பொருள் தன்னை உய்த்துணர்ந்தார் இவ்வுலகில் 
உருக் கொண்டோர் ஆயினும் உருவிலார்

தம்மின் கற்றார் முன் பணிவும் -செழுங்குலத்துச் 
செம்மையுடையார் கண் நட்டலும் இல்லார்க்கு 
அறிந்து ஈதலும் வாட்கண் பிறை நுதலாய் மூன்றும் 
செறிந்து வாழ்தலின் வழி இரண்டில்.

இரந்து வாழ்வதிற்  பெரிதாம்  பொருள் போற்றும் இவ்வுலகில்
கரந்துறைதல் ; ஈட்டிய திரவியம் நவமணி பொன் ஒன்றும்
கரவா வறியவர்க்கீந்து  குறை களைந்திசை  பட வாழும்
வர மருள்வாய் இறையொரு பாகத்து அபிராமியே

நான் பயின்ற பல்கலைக் கழகம்

அம்மா நீயே எனக்குக் கற்பித்தாய்
வாசிக்கவும் யோசிக்கவும் நேசிக்கவும்
ஒன்று அறிவைக் கூட்டியது
ஒன்று மனத்தை மீட்டியது
ஒன்று இறையை என்னுள் பூட்டியது 
இசையும் இலக்கியமும் என்னுள் முகிழ்க்க 
நீயல்லால் வேறொரு காரணமில்லை
வாழ்க்கை என்பது மனத்தால் வாழ்வது
மனத்தைப் போற்ற உன்னிடம் பயின்றேன்
அப்பா கற்பித்தது கணிதம் 
ஆனால் நீ என் கணினியே ஆனாய்
காகிதம் சொல்லும் நீ கற்றது  பத்தாவதென்று
ஆனால் நீ பெற்றது பல முனைவர் பட்டம்
பொறுமையில் சகிப்புத் தன்மையில் விட்டுக் கொடுத்தலில் 
குழந்தை வளர்ப்பில் உளவியலில்
உண்மையில் அம்மா நீ ஒரு பல்கலைக் கழகம்

ஈன்று புறந்தந்து உணர்வுற உயர்வுற
ஈங்கு உறவுறவும் மகிழ்வுறவும் கற்பித்த தாயும்
வாழ்வையோர் கணிதமாய் வாழ்ந்து
வானுறும் அறிவால் மாலென உயர்ந்து
"மனிதரை, வாழ்க்கையைக் கணி" என்ற 
மாமேதையும் வாழ்வில் இணைந்த திரு நாள்
மாலுறை திருத்தலமோர் நூற்றாறும்
நாலு மறை ஈசன் தலம் பனிரெண்டும்
இணைந்தே சென்று வழிபட்டதோர் தெய்வப்
பிணைப்பில் உதித்த நாம் தன்யரே


ஐந்தாம் மறை

துள்ளும்  வயதில்  பள்ளிக்கு அனுப்பித் தந்தையின் கடனாற்றினாய்
பள்ளியில்  கணிதப் புதிர் கண்டு மற்றவர் மலைத்து நிற்க
சுடு சொல் ஆசிரியன் தானும் அயர்ந்து நிற்க 
சடுதியில்  இடும் திறன் தந்து   அனைவரை வியக்க வைத்தாய்
நல்லாசிரியரும் ஆர்வமிகு   நண்பனும் நயந்து  அடுக்க
கல்வியில் பள்ளியில் கோலோச்சும் அரியணை இருத்தினாய்;
வாழ்வைக் கலையாய் அன்னை காட்ட வாழ்க்கை நுகர்ந்தேன்
வாழ்வையோர் அறிவியலாய் நீ காட்ட அச்சம் தவிர்த்தேன்
யாமறிந்த தலைமுறையில் நின்னை நிகர்த்ததோர் அறிவுத்திறன்
தாம் பெற்றோர் யாருமில்லைஎன்றும் எங்கும் உரைப்பேன்
பொருள் ஏதாயினும் பொதுவில் வைத்துண்ணும் பாங்கும்
அருமை மக்களின் நன்மை நாடி  செய்தொழில் உயர்வு துறந்ததும்
எங்கும் எதிலும் நுண்ணியதோர் பார்வையும் தர்க்கித்துப்
பாங்குடன்  பகுத்து ஆராய்ந்து  தெளியும் திறனும்
எண்ணிற் பெருமை தரும்என்றும் இதை
நண்ணிப் பேணுவோம் போற்றுவோம் யாம்
தந்தையே ஆசானாகும் பாக்கியம் அரிது
இந்த ஆசானை என்னவென்று   அழைப்பதுசிந்தித்தேன்
எல்லோரும் துரோணன் என்பர்;எனக்கு உடன் பாடில்லை
நல்லதோர்  குருவென்று   நான் அவனை ஒவ்வேன் ; எமக்கு நீ வியாசன் ; 
வேத குரு  தந்ததும் தொகுத்ததும் நான்கு மறை
தாத ! நீ படிப்பித்தது வாழ்வியலெனும்  ஐந்தாம் மறை


தோழி


ஆல் போல் தழைத்துப் படர்ந்து உயர்ந்தாலும் 
ஆங்கோர் வேரடி நீ எனக்கு நீயின்றி நானில்லை 
ஆழியுட் துயில் மாலுக்கோர் திருமகளாம் 
தோழி நீயிருப்ப வெல்வம் யாம் இவ்வுலகை 


Monday, August 6, 2012

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள்:


திரு. பாலகுமாரன் 

பாலகுமாரனை நான் முதலில் படித்தது அவரது "கெட்டாலும் ஆண் மக்கள்". குமுதத்தில் பிரசுரமான சிறுகதை. சற்றே ஆண்களின் பக்கம் சாய்ந்த கதை என்று சிலர் அபிப்ராயப்பட்டாலும்  நிஜத்தில் ஷ்யாமளிக்கு  (கதையின் நாயகிநெருக்கமான குணமுள்ள பெண்களைச் சந்தித்திருக்கிறேன்முதலில்  என்னைத் தாக்கியது அவர் நடை.
"என் ரத்தத்தில் மூர்க்கமில்லாமலில்லை  . என் பாணி வேறு; சீதம்ம மாயம்ம என்று நெகிழ்ந்து 
முழு நேரக் கச்சேரி மாதிரி  அமையணும்  எனக்கு"

அடுத்தது மெர்குரிப் பூக்கள். சிம்சன் நிறுவன வேலை நிறுத்தத்தை பின்புலமாக கொண்டு எழுதிய கதை. இந்த ஆள் வாழ்க்கையை அனுபவித்து எழுதுகிறவர் என்பது அந்த எழுத்தின் பீறிடும் வேகத்தில்  புலனாகியது. " கறித் துண்டுகளை ஒதுக்கி வைத்து விட்டு பிரியாணி முழுவதையும்  ஒரு பருக்கை விடாமல் ஆவலுடன்  கோபாலன் சாப்பிட்டான்... டீ யின் சூடு இதமாய் நெஞ்சு முழுதும் பரவியது. அம்மா உலகில் யாரும் பசியோடிருக்கக்கூடாது " வன்முறையைச்  சொல்வதிலும்  அவர் பாணி தனி. " ஸ்டிலட்டொவை வாகாய்க் கையில் ஏந்தி அறிவுக்கரசன் தொண்டையில் இறக்கினான். பஞ்சுப்பொதியில் இறங்குவது போல் அது அறிவுக்கரசன் நெஞ்சுக் குழியில் இறங்கியது"

கதை சொல்லும்போது திடீரென விலகி ஒரு பாத்திரத்தின் சிந்தனையாய் ஒரு ஸ்லோகமோ ஒரு தமிழ்ச் செய்யுளோ கவிதையோ வரும். சொல்ல வருகிற விஷயத்தை மிக வசீகரமாய்ச்  சொல்லும் உத்தி இது. என்னை மிகக் கவர்ந்த விஷயம். இன்றும் நான் ஏதாவது எழுத முற்பட்டால் பாலகுமாரன் பாணி என்னை ஆக்ரமிக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டு அதிலிருந்து விலகி எழுத வேண்டி வரும். நான் ஒரு பெரும் எழுத்தாளன் என்று சொல்லும் முயற்சியல்ல இது. பாலகுமாரனின் பாதிப்புக்கு ஒரு உதாரணம். அவ்வளவே

 பிறகு  இரும்பு குதிரைகள் : வன்முறையும் பிறன்மனை  விழைவும் சொன்ன பாலகுமாரன் வேதாந்தம் சொன்ன நாவல் இதுவாழக்கையை அதன் இயல்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பாலகுமாரன் கிட்டத்தட்ட ஈசோபநிஷதத்தின் சாரம் சொல்கிறார். இது இலக்கியச் சிந்தனை விருது பெற்ற நாவல். அதற்கு மேலேயும் தகுதி இந்நாவலுக்கு உண்டு

எல்லாவற்றையும் விட முக்கியம் ஒரு நல்ல கணவனாய் குடும்பத்தலைவனாய் இருக்க வழி காட்டியவை அவர் எழுத்துக்கள். என் குடும்ப வாழ்க்கை ஆரம்பித்த போது சர்வ நிச்சயமாய் என்னைக் கைப் பிடித்து அழைத்துச் சென்றது அவர் எழுத்து

பாலகுமாரனிடம் பாசாங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததுண்டு.  என்னளவில் இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. வாழ்க்கை ஒரு ஆன்மாவின் பயணம். யானையைப் பார்த்த குருடன் போல் நம் பரிணாம வளர்ச்சிக்கு எட்டிய வரையே நாம் வாழ்க்கையை உணர்கிறோம். இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் நிற்கிறார்கள். நம் கட்டத்தில் நின்று கொண்டு அடுத்த கட்டத்தில் இருப்பவரைப் புரிந்து கொள்ள இயலாது.

பெண்களின் மீதான அடக்குமுறை குடும்பம் என்ற அமைப்பை உடைக்கும் என்று ஆணித்தரமாகச் சொன்னவர் பாலகுமாரன். இன்று ஆணாதிக்கம்  என்ற நீர்க்குமிழி உடைந்து விட்டது. கல்யாணத்துக்குப்  பெண் கிடைக்காமல் ஆண்கள் இன்று அலைகிறார்கள்.  கல்வியும் பொருளாதார  சுதந்திரமும்பெண்களுக்குத் துணிவைக் கொடுத்துள்ளனஆண் துணையின்றி வாழ முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும் பெண்களுக்கு இன்று வந்திருக்கின்றன
[ப்படி ஒரு காலம் வரும் என்று எச்சரித்தவர் பாலகுமாரன்.


இரும்பு குதிரைகள் நாவலில் மாலனின் ( முன்னுரை) வரிகள் இவை :
" மரபு பேசாமல் குதர்க்கம் பேசிச் சிரிக்காமல் ஒரு விளக்கை ஏற்றியிருக்கிறாய். இதற்காக ஒரு தலைமுறை உனக்குக் கடன் பட்டிருக்கிறது"