Saturday, February 5, 2022

கருணாநிதியும் கண்ணதாசனும் - ஒரு பார்வை

 கருணாநிதியை முத்தமிழ்க்  காவலர் என்று அழைப்பது பற்றிய ஒரு சர்ச்சை. 

அதன் எதிரொலியாக இது தோன்றியது

இது என் எழுத்து

ஒரு கவிஞன் அல்லது படைப்பாளி காலத்தை வென்று நிற்க வேண்டுமாயின் உண்மையை எழுத வேண்டும். சத்தியத்தின் சந்நிதியில் படைக்கப்படும் படைப்புகளே காலத்தை வெல்லும். இது ஒரு நிதர்சனம். தனக்கு, தன்  உணர்ச்சிகளுக்கு, உண்மையாக இருக்க வேண்டும். தன்  வரையில் உண்மையை எழுத  வேண்டும்.

கண்ணதாசன் என்ற கவிஞனிடம் உண்மை இருந்தது. அவர் படைப்புகளில் சத்தியம் ஜொலித்தது. தமிழை அவர்  தன் சுயநலத்திற்குப் பயன் படுத்தவில்லை.  அவர் பாடலில் எந்த மனிதனும்-  அவன் படித்தவனோ  பாமரனோ - தன்னை அடையாளம் காண முடிந்தது. எல்லா மனிதர்களிடம் இருக்கும் உணர்ச்சிகள் உரைக்கப் படாதவை. அவர்களால் அதை எழுத முடியாது. அது ஒரு வரம். ஆனால் அதை மிகச் சரியாக ஒரு எழுத்தாளனோ கவிஞனோ படம் பிடித்துக் காண்பிக்கும்போது " அட சரியாகச் சொன்னாண்டா " என்று ஒரு சாதாரண மனிதன் துள்ளுவான்.

கண்ணதாசன் அப்படிப்பட்ட கவிஞன்.

இன்றைய இளைஞர்கள் கூட காதல் தோல்வியுறுகையில் "கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்' என்ற பாடலில் உருகுகிறார்கள் என்றால் அந்தப்  பாடல் எப்படி எல்லோர் மனதுடன் உறவாடுகிறது என உணரலாம்.

"எந்த  வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்கே எனது பாடல் ஒன்று எதிரொலிக்கும்" என்று கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். அது உண்மை.

"பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா" என்று அவர் எழுதியதைப் படிப்பவன் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியுமா?

"நன்றி  கெட்ட மகனை விட நாய்கள்  மேலடா" என்ற வரியினைக் கேட்டுப்  பொங்காத உள்ளம் உண்டா?

"உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை" என்ற வரிகளில் தன்னைக் காணாதவர் உண்டா?

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற  மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை" எனும் வரிகளை நமக்கே எழுதியவை போல வாழ்வில் எப்போதேனும் உணராதவர் உண்டா?

இன்று கண்ணதாசன் மறைந்து முப்பத்தெட்டு ஆண்டுகளாகி விட்டன. இன்றும் பல அரங்குகளில் கண்ணதாசன் புகழ் பாடப்படுகிறது. அவரை ஒரு பேசு பொருளாக எடுத்துக்கொண்டு பாராட்டுகிறார்கள்.  அவர் படைப்புகளை ஆராய்ந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 

காலத்தை வெல்வது என்பது இதுதான்

கருணாநிதியை ஒரு பெரிய இலக்கிய கர்த்தாவாக என்னால் ஏற்க முடிந்ததில்லை. 

அவர் ஒரு நல்ல தமிழறிஞர் என்பதில் எனக்கு மாற்றுக கருத்தில்லை . தமிழறிஞர் என்பதும் நல்ல படைப்பாளி இலக்கிய கர்த்தா என்பதும் இரு வேறு விஷயங்கள்.

அவர் தமிழைத் தனக்கு, தன் அரசியல் பிம்பக் கட்டமைப்புக்கு, அதிகாரத்தின் ஏணிப்படிகளை  அமைப்பதற்கு, ஒரு கருவியாகத்தான் கண்டார்;  பயன் படுத்தினார்.

அவர் வசனம் எழுதிய படங்கள் எல்லாம் அவரை அதிகார பீடத்தின் அருகில் அழைத்துச் சென்றன . தமிழ்தான் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.

அந்தப் பாணி பின்னாளில் செல்லுபடி ஆகவில்லை என்பதும் அவர் படங்கள் தோல்வியைத் தழுவின என்பதும் பிற்கால வரலாறு.

ஒரு சாமானிய மனிதன் எந்தப் படைப்பில் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறானோ அது காலத்தை வெல்லும்.

சமீபத்திய உதாரணம் பாலகுமாரன். அவர் எழுத்தில் எல்லோரும் தங்கள் வாழ்க்கையை அடையாளம் கண்டு கொண்டார்கள். கண்ணதாசன் போலவே பாலகுமாரன் தமிழர்கள் நெஞ்சில் நீங்காமல் வாழ்வார்.

அப்படிப் பட்ட  படைப்புகளை கருணாநிதி கொடுத்திருக்கிறாரா?

இன்னும் முப்பதுஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியின் படைப்புகளைக் காலம் நினைவில் வைத்திருக்குமா? மனிதர்கள் அப்படைப்புகளோடு உறவாடுவார்களா?

நான் இல்லை என்றுதான் சொல்வேன் 

காலம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் .

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home