Thursday, December 23, 2021

 ஐயன்  

உடையார் கங்கை கொண்ட சோழன் இரண்டும் படித்து முடித்து விட்டேன். கல்கி, ஜெகசிற்பியன், அகிலன், நா பா ,  சாண்டில்யன், சுஜாதா ,  ஏன் மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" என்று பலருடைய சரித்திர நாவல்களைப்  படித்திருக்கிறேன். இவ்வளவு ஆழமாக அன்றைய  சமூகவியல்  பார்வையோடு ஒரு சரித்திர நாவல் படித்ததே இல்லை.  அன்று வாழ்ந்த உணர்வைக் கொடுக்கிறது உங்கள் எழுத்து. 

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த,  சிந்திக்க வைத்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.  இப்படிப் பகிர முடிவது உங்களோடு நேரடித் தொடர்பு கொள்ளும் உரிமை என் பாக்கியம். இதை எனக்களித்த என் வழிகாட்டியும்   எனதருமை ஸ்நேகிதியும் என் மனைவியுமான ஷீலாவுக்கு என் நன்றிகள். 

முதலில் பிரமிக்க வைப்பது ஆழ்ந்த  புள்ளி விவரங்கள். அன்றைய குறியீடுகள். சம்பவங்கள் மட்டுமே கற்பனை. ஆனால் கற்பனை  எது நிஜ நிகழ்வு எது என்பது தெரியாமல் ஒன்றன் மீது ஒன்றாய்  அடுக்கிய கதைக் கோவை,  கிட்டத்தட்ட இன்னொரு பெரிய கோவில் கட்டுமானம். 
எத்தனை  வருட உழைப்பு என்ன ஒரு  உறுதி எவ்வளவு அர்ப்பணிப்பு என்கிற திகைப்பு. 

மனிதர்களை மனிதர்களாய்ச் சித்திரித்திருக்கிறீர்கள். வெறுமனே ஒரு ஹீரோ என்பதாக இல்லாமல் திரையில் காணுகிற பிம்பங்களாக இல்லாமல் பொறாமை கோ பம் அழுகை  பக்தி சந்தேகம் ஊசலாட்டம் அவநம்பிக்கை என்று  அவர்களோடு வாழ்ந்த  உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அரையன் ராஜ ராஜனும் அருண் மொழிப பட்டனும் மோதும் இடங்கள் அற்புதமாய் வந்திருக்கின்றன.  வெற்றி என்பதோடு நின்று விடுவதில்லை.   வெற்றியை சட்டென மறந்து  அடுத்த செயலுக்குப்  போக ஞானிகளாலும் கர்ம யோகிகளாலும் தான் முடியும்.  பெற்ற  வெற்றியில்  என் பங்கு எவ்வளவு என்பதே சாதாரண மனிதர்களின் மனப்பாங்கு. 

என்னைக் கொண்டாடு. அதென்ன உன் ஆசை மனைவியை முன்னிறுத்தி விட்டாய்  அப்போது இதன்  காரணம் நானில்லையா  சரியான சமயத்தில்  நான் போயிருக்கா விட்டால் சற்று தாமதித்திருந்தால் அருண் மொழிப பட்டன் இல்லாமல் அல்லவா  போயிருப்பான் போரின் முடிவே மாறியிருக்காதா  என்ற அரையன்  ராஜராஜன் குமுறல். நானல்லவோ கங்கை கொண்டவன் என்னைக் கொண்டு காரியம் சாதித்து விட்டு கங்கை கொண்டதாக நீ பேர் சூட்டிக் கொள்கிறாயே  என்ன அக்கிரமம் இது என்னும் கொதிப்பு ; நானல்லவோ அரசனாய்க் கொண்டாடப் பட வேண்டியவன் என்கிற பேராசை. இனி உனக்கு அடங்கி இருக்க முடியாது எனும் மூர்க்கம். 

மிகப் பெரிய வீரர்களை வீழ்த்துவது அவர்கள் பெற்ற  வெற்றியே;  எதிரிகளல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். என்னைப்  பொறுத்த வரை வெற்றி பெற விரும்புபவர்கள்  மட்டுமல்ல வெற்றி பெற்றவர்களும் படிக்க வேண்டிய  வேதம் இந்த இரு புத்தகங்களும். 

போர்கள் மட்டுமல்ல கோவில் கட்டலிலும் அரசன் சந்திக்க நேருகின்ற   சமூகப் பிரச்னைகளை  நீங்கள் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. எவ்வளவு தீர்க்கமான  பார்வை. 


தந்திரம் கொள்ளின் அந்தணம் பிழைபடும்  என்பது என் எண்ணம்.  அந்தணம் என்பது அமைதி;  இறை தேடல் . ஞானம் இறைத்தல் . ஊருக்கு நன்மை உரைத்தல்;   தன்னுள் நன்மையின்றி ஊருக்கு எப்படி  உரைக்க முடியும்.  பேராசையும் கர்வமும் தந்திரமுமாய்த் தானிருப்பின் இறைமை எங்கே வரும்.  பரமாச்சாரியார் சொன்னது போல் ப்ராம்மண்யம்  என்பது வலிந்து ஏற்றுக்  கொள்ளும்  வறுமை; ஒரு தியாகம். ; அதைச் செய்யாமல் பிறப்பால் உயர்வு கொண்டாடுவது அயோக்கியத்தனம்; மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர் ஐயன். 

ராஜேந்திரரின் அந்தண வெறுப்பு இன்றைய நிலையின் சாயல். ஆனால் அதற்கு முழுப் பொறுப்பு அன்றைய அந்தணர்களின் நடவடிக்கை என்பதே உண்மை.. 

எவ்வளவுதான் க்ஷத்ரியனைப் போல் வாளேந்திப் போரிட்டாலும் உடன்  பிறந்த  குணங்களை மாற்றுவது அரிது என்பதற்கு அருண் மொழிப பட்டன் ஒரு உதாரணம். அதை ராஜேந்திரர் வாய் வழி அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். "அருண்மொழி மூர்க்கமாய்த் தாக்குவான்; முடமாக்குவான்;  ஆனால் கொல்ல  மாட்டான் ".

எல்லாவற்றையும் விட கதை  சொல்லும் போக்கில் கூடவே வருகிற இறையுணர்வு; அற்புதம்;  எல்லோர் வாயிலாகவும் சொல்கிறீர்கள்; 

எப்படிப்பட்ட பேரரசனும் ஒரு நாள் இல்லாமல் போவான்; வயதாகும் கண் மங்கும்; நினைவு தவறும் . மரணம் எதிரே நிற்கும் போது அட்டகாசமாய்ப் பெற்ற  வெற்றிகள் காணாமல் போகும்; ராஜேந்திரருக்கும் இது நிகழ்கிறது; வெற்றியைப் பின் தள்ளி   வெட்டிய ஆட்கள் நினைவுக்கு வருகிறார்கள்;  சாதனையாய் நினைத்தவை பாபங்களாய்ப் பயமுறுத்துகின்றன;  படிக்கும் போது ஆடிப் போயிற்று; 

மரணம் என்கிற உண்மை சொல்ல இரண்டு அரசர்களின் இறுதியையும் அழகாய்ப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்தைப் பாராட்ட நான் யார். இது ஒரு பகிரல்; ஒரு நன்றி உரை அவ்வளவே .

இறுதியாய் ஒரு வார்த்தை.

என்னதான் ராஜேந்திரர் வெற்றியைக் கொண்டாடினாலும் என் மனம் ராஜ ராஜர் பக்கம் தான். இதை வைத்து என் குணம் என்ன என்று  சொல்லுங்கள் ஐயன். 

அன்பு கலந்த வணக்கங்களுடன் 

ஸ்ரீநிவாஸன் 





0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home