ரிட்டயர்மெண்ட்
நான் CFO GM, CEO MD என்று தாங்கள் வகிக்கும் பதவியோடு பலர் தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள்
பதவியில் இருக்கும் போதே அதிலிருந்து மனதளவில் விலகி நிற்கப் பழகுங்கள் நீங்கள் வேறு உங்கள் பதவி வேறு.
பதவி ஒரு தொப்பி. வீட்டிற்கு வந்தவுடன் அதைக் கழற்றப் பழகுங்கள், ஓய்வு பெறும் முன்பே.
இல்லையெனில் ரிட்டயர்மெண்டிற்குப் பிறகு டிப்ரஷன் நிச்சயம்
ரிட்டயர்மெண்ட் பற்றிய பதிவைப் பார்த்து விட்டு இரண்டு போன் கால்கள்.
"Are you alright?"
வாய் விட்டுச் சிரித்தேன். இல்லை. அது என் அனுபவமில்லை. In fact ரிட்டயர் ஆவதற்கு இரண்டு வருடங்கள் முன்பிருந்தே அதற்குத் தயார் செய்து கொண்டிருந்தேன் In the sense that என்ன செய்யணும் என்ன செய்யக் கூடாது என்று.
பாலகுமாரன் ஒரு முறை எழுதினார்
" முதுமை என்பது பேரப்பிள்ளைகளுக்கு முண்டா காண்பிப்பதல்ல. இது வரை வேலை நிமித்தம் புறக்கணித்த இயற்கையை உற்றுப் பார்ப்பது"
இதைத்தான் செய்கிறேன்
நிற்க. என் பதிவு நான் பார்க்கும் முதியவர்கள் பற்றியது. Chief manager Zonal manager CEO VP MD எதுவாக இருந்தாலும் சிலர் அந்த முகமூடியைக் கழற்றுவதில்லை.
ஒரு Instructing, questioning platform இலிருந்து இறங்க மறுக்கிறார்கள்.
வாழ்க்கை எனும் நாடகத்தில் ரோல் மாறி விட்டது என்பதை உணர மறுக்கிறார்கள்.
எனவே சின்னச் சின்ன விஷயங்கள் கூடத் தங்கள் அதாரிடியை கேள்வி கேட்பதாக நினைத்துப் பதறுகிறார்கள்.
சுய பரிதாப வளையத்துக்குள் போய் விடுகிறார்கள். இதைத்தான் டிப்ரஷன் என்று எழுதினேன்.
நமது கலாச்சாரம் மிக அழகாக வானப்ரஸ்தம் என்ற ஒன்றை வைத்திருக்கிறது.
அதன் அழகையும் அர்த்தத்தையும் உணர்ந்தால் கடைப்பிடிப்பது எளிது.
முதுமை சுகமாய் விடும்.
நான் உணர்ந்ததை எழுதுகிறேன்.
காதுள்ளவர் கேட்கக் கடவர்.
இந்த வாழ்க்கை ஒரு பெரிய மெகா சைஸ் ட்ராமா. யாரோ ஒருவன் ஸ்க்ரிப்ட் எழுதி இயக்குகிறான். அவன் எழுதி வைத்த ஸீன்களில் அவன் டயலாக்கைத்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
நமக்குண்டான ஸீன்கள் ஒரு கட்டத்தில் முடிந்துவிடும். சில சமயம் அப்படி முடிந்த பின்னும் ட்ராமா முடியும் வரை ஸ்டேஜின் ஓரத்தில் நின்று பார்ப்பது போல்தான் முதுமை. மிச்சமிருக்கும் வாழ்க்கை.
முதுமையில் இந்த உணர்வு வந்துவிட வேண்டும். வந்தால் என்ன நடந்தாலும் ஒரு சிரிப்புதான் வரும். தண்ணீரிலேயே இருந்தாலும் ஒட்டாத அமிழாத தாமரை இலை மாதிரி ஆகி விடுவோம். ஆகி விட வேண்டும். வானப்ரஸ்தம் என்பது இதுவே.
ஆனால் ரிட்டயர் ஆன பெரிசுகள் தங்கள் ஸீன்கள் முடிந்துவிட்டதென ஒப்புக் கொள்வதில்லை. தேவையின்றித் தலையிடுகிறார்கள். சம்பந்தமில்லாத ஸீனில் தலையைக்காட்டி டயலாக் பேசினால் எப்படி இருக்கும்? அது போல்தான் இவர்கள் செய்கையும்.
உட்கார்ந்து சுற்றி நடப்பதை வேடிக்கை பாருங்கள். வந்து கேட்டால் அபிப்ராயம் சொல்லுங்கள். கவனியுங்கள். அபிப்ராயம் மட்டுமே. அட்வைஸ் இல்லை. உங்கள் அபிப்ராயப்படி அவர்கள் செய்யாவிடில் விட்டுவிடுங்கள். அது அவர்கள் வாழ்க்கை.
சரி நாங்கள் என்னதான் செய்வது என்கிறீர்களா
தொடர்ந்து பார்ப்போம்
ரிட்டயர்மென்ட் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்
ஓய்வு பெறப்போகும் தேதி அநேகமாக எல்லோருக்கும் தெரியும் இரண்டு வருடங்கள் முன்பிருந்தே உங்கள் செயல்பாடுகளைத் தீர்மானியுங்கள்
உதாரணமாக நீங்கள் முப்பத்தைந்து வருடங்களாக வேலை பார்த்திருக்கிறீர்கள் மொத்த வீடும் உங்களைச் சுற்றி இயங்கியிருக்கும்
அப்பா ஆபீஸ் போகணும் என்று மகள் துணியை அயர்ன் பண்ணிக் கொடுத்திருப்பாள்
பையன் பைக்குக்குப் பெட்ரோல் போட்டுத் துடைத்திருப்பான் மனைவி கேட்கவே வேண்டாம் "இரு அப்பாவை ஆபீசுக்கு அனுப்பிடடுதான் உன்னைக் கவனிப்பேன்" என்று குழந்தைகளிடம் சொல்லியிருப்பாள்
ஆக உங்கள் வீட்டின் மையப்புள்ளி நீங்கள். மற்றவர்கள் உங்கள் சப்போர்ட் சிஸ்டம்
ரிட்டயர் ஆகும்போது குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள் மகனும் மகளும் வேலை செய்யத் தொடங்கி இருப்பார்கள்
இப்போது உங்கள் முறை
நாம் எப்போதுமே மையப்புள்ளியாக இருக்க முடியாது.
ஒரு நடிகர் எப்போதும் ஹீரோவாக நடித்தால் "இவனுக்கென்ன ஹீரோ வேஷம் வேண்டிக் கிடக்கு ஒரு அப்பா ரோல் பண்ண வேண்டியதுதானே" என்று கிண்டல் செய்கிற நாம் நமக்கென வரும் போது இதை மறந்து விடுகிறோம்
வாழ்க்கையும் ஒரு திரைப்படம் போல்தான். நீங்கள் அப்பா ரோல் பண்ணும் நேரம் வந்துவிட்டது
சப்போர்ட் சிஸ்டமாக நீங்கள் மாற வேண்டும்
மனைவிக்கு உதவி; வேலைக்குப் போகும் குழந்தைகளுக்கு எல்லாத் துணிகளும் அயர்ன் பண்ணப் போடுவது வாங்கி வைப்பது
காரோ பைக்கோ ஞாபகமாக உரிய ஆளிடம் சொல்லி க்ளீன் செய்து வைப்பது
முடிந்தால் மதியம் மனைவி உறங்கினால் ஒரு டீ போட்டு எழுப்புவது
வாரத்தில் ஓரிரு நாட்கள் "நீ சும்மா உட்கார்" என்று அன்பாக மனைவியை ஒரு அதட்டல் போட்டு ( தெரிந்தால் 😝) நீங்கள் சமைப்பது
இப்படிப் பலப்பல....
நீங்கள் சப்போர்ட் சிஸ்டமாக மாற ஒரு மனசு வேண்டும்
கொடுக்கிற மனசு
இத்தனை நாள் நாம் வாங்கிக் கொண்டோமில்லையா
இப்போது ரிட்டயர்மென்டுக்குப் பிறகு என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்
தமிழ் இலக்கிய மரபுப்படி (இனியவை நாற்பது இன்னா நாற்பது) முதலில் செய்ய வேண்டியவை:
உங்கள் எல்லோரிடமும் உங்கள் தொழில் தவிர்த்து ஒரு திறமை நிச்சயம் இருக்கும். ஒரு ஈடுபாடு இருக்கும்.
சிலர் பாடுவார்கள்; சிலர் வரைவார்கள்; சிலர் கதை அல்லது கவிதை எழுதுவார்கள்; சிலர் கேரம்போர்டு, செஸ் இப்படி.
இவற்றிற்கு இது வரை ஆபீஸ் நெருக்கடியால் டைம் ஒதுக்கியிருக்க மாட்டீர்கள்.
இவற்றை வளர்த்தெடுங்கள்.
உங்களை இது போன்ற ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது முன்பே சொன்ன மாதிரி நீங்கள் சப்போர்ட் சிஸ்டமாக இயங்கியது போக மீதி நேரத்தில்.
வாசிக்கும் பழக்கம் இருந்தால் நல்ல புத்தகங்கள் படியுங்கள். இதோ நான் பரிந்துரைக்கும் சில புத்தகங்கள்.
உடையார் 6 பாகங்கள் (பாலகுமாரன்)
கங்கை கொண்ட சோழன் 4 பாகங்கள் (பாலகுமாரன்)
தங்கக்கை (பாலகுமாரன்)
கற்றதும் பெற்றதும் (சுஜாதா)
ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் (சுஜாதா)
தலைமைச் செயலகம் (சுஜாதா)
ரத்தம் ஒரே நிறம் (சுஜாதா)
வந்தார்கள் வென்றார்கள் (மதன்)
சில நேரங்களில் சில மனிதர்கள்
(ஜெயகாந்தன்)
ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுதி 1&2
சிகப்பு ரிக் ஷா (தி ஜானகிராமன்)
மோகமுள் (தி ஜானகிராமன்)
வனவாசம் (கண்ணதாசனின் சுயசரிதை)
இவை ஒரு தொடக்கமே.
பழந்தமிழ் இலக்கிய ஆர்வம் உண்டெனில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தொடங்குங்கள்
மூதுரை, நான்மணிக்கடிகை, நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம் இவை அற்புதம்
கம்பனைப் படியுங்கள். ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாது
திவ்யப் பிரபந்தம் இன்னொரு அமிர்தக் கடல்.
கண்ணதாசன் கவிதைத் தொகுதி (7)
இன்று யூ ட்யூபில் நிறைய இலக்கியச் சொற்பொழிவுகள் கிடைக்கின்றன. பாருங்கள்.
இசைக்கவி ரமணனின் "காலங்களில் அவன் வசந்தம்" என்ற நிகழ்ச்சி யூ ட்யூபில் உள்ளது கண்ணதாசன் திரைப்பாடல்களில் உள்ள நயங்கள் பற்றிய நிகழ்ச்சி
திரைத் துறையில் ஆர்வமிருப்பின் சித்ரா லட்சுமணனின் "சினிமாவுக்குள் ஒரு சினிமா" மற்றும் 'சாய் வித் சித்ரா" யூ ட்யூபில் உள்ளன. மிக சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும்.
தனிமையில் இருக்கப் பழகுங்கள்
உங்களுடைய இச்செயல்கள் தனிமைக்கு உதவும்.
அதிகாலை எழுந்து வாக்கிங் செல்லுங்கள். சூரிய உதயம் பாருங்கள்.
இதனால் மூன்று நன்மைகள்
1. உடல் நலம் பெறும்
2. காலையில் சூரிய உதயம் பார்ப்பது ஒரு மிகப் பெரிய மன நலம் தரும் விஷயம்
3. வெளியில் சிலர் பரிச்சயம் ஏற்பட இது உதவும் மனப்புழுக்கத்தைத் தவிர்க்கும்
ஒரு பதினைந்து நிமிடமாவது உட்கார்ந்து நாடி சுத்தி செய்யுங்கள்
அதன் பிறகு ஒரு பதினைந்து நிமிடம் உங்கள் மனதை உற்றுக் கவனியுங்கள். அதுதான் தியானம்.
உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். மனம் ஆரவாரமில்லாது அமைதியாக இருக்கும்.
நீங்கள் உத்தியோகம் பார்த்த நாட்களை விட உற்சாகமாக உணர்வீர்கள். இது உறுதி.
This is a payback
(இன்னும் வரும்)
இப்போது ரிட்டயர்மென்டுக்குப் பிறகு என்னென்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்
முதலில் தவிர்க்க வேண்டியது உங்கள் ஆபீஸ் நினைவுகளை - குறிப்பாக உங்களுக்குக் கிடைக்காத இன்க்ரிமென்ட், ப்ரமோஷன் இவை பற்றிய நினைவுகளை.
நல்ல பதவியில் வெற்றிகரமாக இருந்திருந்தால் தவிர்க்க வேண்டியது அப்போது கிடைத்த அதே மரியாதை வேண்டும் எனும் எதிர்பார்ப்பை.
நீங்கள் இப்போது ஜி எம் இல்லை. ஸிஇஓ இல்லை. எம்டி இல்லை. முதலில் ஆபீஸை மனத்திலிருந்து எடுங்கள்.
உங்கள் குழந்தைகள் வளர்ந்து விட்டிருப்பார்கள்.
அவர்கள் வாழ்வின் பிரச்னைகள் அவர்களுக்கு. உங்களோடு செலவிட அவர்கள் நேரம் ஒதுக்கவில்லையெனில் கோபப் படாதீர்கள்
புரிந்து கொள்ளுங்கள். விலகி நில்லுங்கள்.
அவர்கள் மீது தவறு இருப்பினும், கோபம் பயனற்றது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
எல்லா முடிவுகளையும் உங்களைக் கேட்டுதான் எடுக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.
நீங்களாக எல்லா விஷயங்களிலும் ஆலோசனை சொல்லாதீர்கள். கேட்டால் அபிப்ராயம் சொல்லுங்கள். அது பின்பற்றப்பட்டே ஆக வேண்டுமென எண்ணாதீர்கள். பின்பற்றப்படவில்லை என்றால் கோபப் படாதீர்கள்.
உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தவர்கள் அவர்கள் உங்கள் உடமைகளல்ல. எனவே அவர்களை இறுக்கிப் பிடித்து வைக்கும் தவறைச் செய்ய வேண்டாம்.
பெரும்பாலான முதியவர்களின் பிரச்னை மரண பயம்.
மரணம் வாழ்க்கையின் இறுதி உண்மை. அது ஒரு முடிவல்ல. மாற்றம்.
After all, இந்த உடலில் வாழும் வாழ்க்கை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரயில் சிறிது நேரம் நிற்பது போல்தான்.
நாம் வந்த வேலை முடிந்து விட்டது. கிளம்பியே ஆக வேண்டும். பின் வேறு உடல், வேறு வாழ்க்கை.
வாடகை வீட்டில் தங்கியிருப்பது போல்தான் நம் வாழ்க்கை.
அருணாசலம் படத்தில் ஒரு அருமையான வசனம் வரும்.
ரம்பா ஏன் வாடகைக்கு உடைகளை எடுக்கிறீர்கள் என்று கேட்பார்.
ரஜினி ஒரு புன்னகையுடன் " நாம விடற மூச்சே இந்த உடம்பில் வாடகைக்குதாங்க இருக்குது" என்பார்.
இந்த உண்மையை தினமும் சிறிது நேரம் நினைத்துப் பாருங்கள்.
மரணம் எனும் பேருண்மைக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
மரணம் பற்றிய இடையறாத ப்ரக்ஞையோடு வாழ்ந்தால் அது வரும்போது தெரிந்து விடும். அதை அமைதியாக வரவேற்கலாம். மரண பயமின்றி உடலை நீங்கலாம்.
மரண பயத்தோடு வாழ்வதும் அதற்குப் பயந்து சாவதும் இழிவு. பயந்து செத்தால் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.
புன்னகையோடு மரணத்தை வரவேற்கும்போதுதான் வாழ்க்கை அழகாகிறது; அர்த்தமுள்ளதாகிறது.
Happy retired life!!!
ரிட்டயர்மென்ட்
"மரண பயத்தோடு வாழ்வதும் அதற்குப் பயந்து சாவதும் இழிவு. பயந்து செத்தால் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.
புன்னகையோடு மரணத்தை வரவேற்கும்போதுதான் வாழ்க்கை அழகாகிறது; அர்த்தமுள்ளதாகிறது."
இதைப் போன பதிவில் சொல்லியிருந்தேன்
மரணத்தை வரவேற்பது எப்படி என்பதைப் பார்ப்போம்
மரணம் என்பது நாம் இருக்கையில் இல்லை. அது வரும்போது நாமிருப்பதில்லை.
எதை மரணம் என்கிறோம்
உடலில் இயங்குகிற, இதை இயக்குகிற, ஒரு சக்தி சட்டென ஒரு நொடியில் வெளியேறி விட, பலரும் பெயர் சொல்லிக் கொண்டாடிய உடல் " பிணம்" என்ற பொதுச் சொல்லாகி விடுகிறது
அப்படியானால் இந்த உடலல்லவே நாம்
உடல் அது சார்ந்த வலி சுகம் அகந்தை சந்தோஷம் துக்கம் இவை?
எல்லாம் பொய்; குப்பை; கற்பிதம்.
வலியும் துன்பமும் ஒன்றில்லை
Pain is different from suffering.
எல்லா வலியிலும் மரண பயத்தின் சாயல் இருக்கிறது
மரண பயம் தவிர்த்தால் வலியை உற்றுப் பார்க்க முடியும் உள்வாங்கி அமைதியாக இருக்க முடியும்
முதுமை ஒரு ரோகமல்ல; சில அசௌகர்யங்கள் வரும்; மெஷின் தேய்ந்து விட்டது அவ்வளவுதான்.
உடலாக நம்மை உணர்வதைத் தவிர்த்தால் இது எளிது
இந்த உணர்வு வர ஒரே வழிதான்
உங்கள் மூச்சை உற்றுப் பார்த்திருப்பதுதான்
பார்க்கப் பார்க்க மனம் போடும் ஆட்டம் புரியும்
உடலும் நானில்லை இந்த மனமும் நானில்லை எனும் உணர்வு வரும்
லௌகிக உணர்வுகள் அவ்வப்போது வந்தாலும் இது குப்பை என்று உதற முடியும்
ஒரு ரயிலில் பயணம் செய்கிறீர்கள்
உங்களிடம் கட்டிய துணி தவிர ஒரே ஒரு ஜோல்னாப் பைதான்
கூடவே ஒரு குடும்பம் பயணிக்கிறது; குழந்தைகள்; பெரியவர்கள்; நிறைய சாமான்; அன்போடு பழகுகிறார்கள்; உண்ணத் தருகிறார்கள்.
உங்கள் ஸ்டேஷன் வந்தால் அந்தக் குழந்தைகளை ஆசீர்வதித்து விட்டு, சாமான்களை ஒரு புன்னகையோடு தாண்டிச் செல்வது போல
வாழும்போதே உடல் என்கிற ஐடென்டிடியைத் துறந்தால் உங்கள் இடம் வரும்போது ஒரு சிரிப்போடு இறங்கலாம்
வெளியில் கலக்கலாம்.
இந்த உருவகம் உங்களுக்குப் புரிகிறதா
இது ஒரு யோக நிலை.
மூச்சைக் கவனிப்பது ஒரு ப்ராசஸ்.
குருவருள் தேவை.


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home