My father turns 83 today. Happy birthday Appa!
ஐந்தாம் மறை
துள்ளும் வயதில் பள்ளிக்கு அனுப்பித் தந்தையின் கடனாற்றினாய்
பள்ளியில் கணிதப் புதிர் கண்டு மற்றவர் மலைத்து நிற்க
சுடு சொல் ஆசிரியன் தானும் அயர்ந்து நிற்க
சடுதியில் இடும் திறன் தந்து அனைவரை வியக்க வைத்தாய்
நல்லாசிரியரும் ஆர்வமிகு நண்பனும் நயந்து அடுக்க
கல்வியில் பள்ளியில் கோலோச்சும் அரியணை இருத்தினாய்;
வாழ்வைக் கலையாய் அன்னை காட்ட வாழ்க்கை நுகர்ந்தேன்
வாழ்வையோர் அறிவியலாய் நீ காட்ட அச்சம் தவிர்த்தேன்
யாமறிந்த தலைமுறையில் நின்னை நிகர்த்ததோர் அறிவுத்திறன்
தாம் பெற்றோர் யாருமில்லை; என்றும் எங்கும் உரைப்பேன்
பொருள் ஏதாயினும் பொதுவில் வைத்துண்ணும் பாங்கும்
அருமை மக்களின் நன்மை நாடி செய்தொழில் உயர்வு துறந்ததும்
எங்கும் எதிலும் நுண்ணியதோர் பார்வையும் தர்க்கித்துப்
பாங்குடன் பகுத்து ஆராய்ந்து தெளியும் திறனும்
எண்ணிற் பெருமை தரும்; என்றும் இதை
நண்ணிப் பேணுவோம் போற்றுவோம் யாம்
தந்தையே ஆசானாகும் பாக்கியம் அரிது
இந்த ஆசானை என்னவென்று அழைப்பது? சிந்தித்தேன்
எல்லோரும் துரோணன் என்பர்; எனக்கு உடன்பாடில்லை
நல்லதோர் குருவென்று நான் அவனை ஒவ்வேன்; எமக்கு நீ வியாசன் ;
வேத குரு தந்ததும் தொகுத்ததும் நான்கு மறை
தாத ! நீ படிப்பித்தது வாழ்வியலெனும் ஐந்தாம் மறை


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home