முன்னே பிறந்தான் முறுவலோடிருந்தான் மூன்றின் பின்னுமோர் முடிச்சு
அன்னை சிரித்தாள் அவன் கருமம் என்றாள் சந்தியில் குங்குமம் அளித்து
தாயோ தவித்தாள் துக்கத்திலாழ்ந்தாள் இனியொரு விடியலுக் கேங்கி
தூயவள் நடந்தாள் தன் கரம் நீட்டினாள் அவன் வினை முற்றாய் முடிச்சு
கண்ணனிடம் ஒரு விண்ணப்பம்
ஆலாய்ப் பறந்து யாங்கணும் திரிந்து செல்வமே தேடும் உலகில்
மேலான கலையாம் நாடகம் தன்னைத் தவமாய்க் கொண்டிருப்பார்
ஏலாதி போல மணங்கமழ் புகழால் காலத்தை வென்று நிற்க
பாலாஜி என்னும் நற் கலைஞனுக்கோர் அற்புத வாய்ப்பளிப்பாய்
அயல்நாட்டுக் குடிமக்கள் அடிமைகள் இந்தியராய்
தயங்காமல் வேடமிட்டார்; பொய்யுரைத்தார்; ராமனவன்
பிறப்பதனை மறுதலித்தார் ஏசிநின்றார் கேலி செய்தார்
அறுபதும் ஓர் ஏழுமாய் ஆண்டுகள்தான் கரைந்தனவே
வெறுப்பதை வாழ்வாக்கி பிழைத்தனர் வஞ்சகர்கள்
காலமகள் கண்திறந்தாள் பாரதத் திரு நாட்டினுக்கோர்
சால்புமிகு தலைவனைத்தான் அரியணையில் ஏற்றிவைத்தாள்
ஆடிநின்று ஊளையிட்ட நரிக்கூட்டம் எல்லாமே
ஓடிச்சென்று ஒளிந்ததம்மா வாழ்த்தொலிகள் உரைக்குதம்மா
மோடியெனும் சிம்மம் இன்று ஓங்கி நின்று ஒளிருதம்மா
பாடிப்பாடி மகிழ்கிறோமே பார்போற்றும் தலைவனையே
எதிர்ப்போரை அணைக்கின்ற சனாதனிகள் பூமியையா
முதிராத மனங்கள் இங்கே சதியாட்டம் போடுதையா
தருமம் தனை ரட்சிக்க நாரணன் ஓர்வடிவெடுத்து
கருமம்தான் புரிகின்றான் பலனேதும் கருதாமல்
அவதார புருஷர்கள் புராணத்தில் மட்டுமில்லை
அவர்தானே ஆளுகிறார் ஆளட்டும் நூறாண்டாய்
பராசரன் பெயர் கேட்டால் நீதிமான்கள் எழுந்து நிற்பர்
சராசரி மனிதருக்கு அப்பாலுள்ள உத்தமராம்
மராமரங்கள் ஏழும் ஓர் கணையாலே துளைத்திட்ட
பராபரமாம் ராமபிரான் கோவிலுக்கு வாதாடி
தராதரம் இல்லாது பொய்யுரைத்த புல்லருக்கு
பராந்தகனாய் நின்ற பெருந்தகை வாழ்கவே
சந்தித்த தருணம் தோறும்
முந்தி வந்து புன்னகைப்பாள்
சந்தோஷமா என்று வினவ
சிந்திக்காது ஆம் என்பாள்
சந்திரனாய் மலர்ந்த முகம்
சிந்தி வரும் அன்பு மொழி
நந்தா விளக்கே குலமகளே
சந்தியா நீ எமக்கு மகள்
பொருளாகத் தந்தாலே காலமதில் நிற்காதென
அருளாகப் பாட்டிசைத்தேன் தமிழ் தந்த பாதையிலே
மண மேடை தனில் இணையும் ஆருயிர்ச் செல்வங்கட்கு
கணந்தோறும் மகிழ்வதனை மாதவனே தந்தருளே
காற்றினிலே குழலிசைபோல்
பாற்கடலில் அலைமகள் போல்
தமிழினிலே இனிமை போல்
இமைக்குள்ளே விழிகள் போல்
அரங்கனும் அழகும் போல்
திருமலையும் அருளும் போல்
குறைவற நலங்கள் யாவும்
நிறைந்து நீங்காமல் வாழ்க
நெடுமாலவன் தடுமாறிடும் அழகு மிக்கதோர் மணமகள்
அடுத்திருந்து நீ அன்பு செய்திடு பெருமையுற்றிடும் வாழ்வதே
நடந்திடும் வழி உனக்குரைக்கவோர் தேவை என்பது இல்லையே
நடத்திடு இனி இன்ப வாழ்வையே என்றும் யாங்கணும் குறைவிலாய்
எம் மருமகளுக்கான கவிதை
அறிவிலே சிறந்ததோர் அழகுப் பெட்டகம்
செறிந்த நற் பண்புடன் வந்தனள் எம் அகம்
கம்பனின் சீதையும் சூடிய கோதையும்
நம்மவன் பாரதி பாடிய புதுமையும்
ஓருருக் கொண்டே எம் குலமகளானார்
பாரினில் பெறத்தக்க தனைத்தும் பெறுகவே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home