Tuesday, January 1, 2019

கோவிலூர் அந்தாதி
1.   புகழ் என்னும் பொன்மானை விரும்பிப் போட்ட வேடம்தான்
புகல் என்றே கழல் பற்ற புகையாய்க் கலைந்ததம்மா
இகமென்னும் பொய் வாழ்வை சுகமென்றே கருதாது
அகம் என்னும் ஆலயத்தில் இருத்துவீர் நம் கோமகனை

2.   கோமகனாய் கோவிலூரில் அமர்ந்தருளும் நாயகனே
யாமறிந்த தமிழாலே நின்னருளால் நினைப்பாட
தாமதமே இல்லாது பாற்கடலில் எமைச்சேர்ப்பாய்
நாமம் அது  ஒன்றே நாராயணா என்னும் வேதம்

3.   வேதமும் எட்டவொண்ணா வாய்மையாம் மாலவனை
நாதமாய் நால் திசையும் நிறைந்தே நிற்பவனை
பாதங்கள் பற்றி வீழ்ந்து மனம் குவித்துத் தொழுதோர்க்கு
மாதவன் எம் கோவிலூரான் மாயை இருள் நீக்குவனே

4.   நீக்கமற நிறைந்தெங்கும் சுடரான பேரொளியே
ஆக்கலும் காத்தலும் அழித்தலுமாம்  முத்தொழிலோய்
ஊக்கமுடன் பற்றின்றி வினையாற்றும் யோகியர்க்கு
போக்கிடமும் நீயன்றோ கோவிலூர் நாரணனே

5.   நாரணனை வணங்காத நாளெல்லாம் பாழ்நாளே
வாரணங்கள் வாழ்த்துரைக்கும் தென் பாண்டிக் காவலனை
காரணமாய் காரியத்தில் விரவி நின்ற  சக்திதனை
ஓர்கணமும் மறவாது மனதில் நாம் நிறுத்துவமே

6.   நிறுத்து அன்றோர் துலாக்கோலில் பத்தியதன் உயர்வுரைத்தாய்
உறுத்து வந்த ஊழ் விலக்கி சிசுவுக்கு உயிரளித்தாய்
மறுத்து நின்ற பார்த்தனுக்கு அறிவுரைத்து செயல் கொடுத்தாய்
அறுத்தெறிவாய் இருவினையும் தென் பாண்டி வேங்கடவா

7.   வேங்கடவன் தனி நின்ற திருமலைக்குச் செல்லவொண்ணார் 
பாங்காகத் துதித்திடவே கிட்டியதோர் விண்ணகரம் 
நீங்காமல் கேசவனை நினைந்துருகும் பத்தருக்கு 
யாங்கணுமே துணை நிற்பான் நீர் கொண்டு விளக்கெரித்தோன் 

8.   விளக்காகி எம் வாழ்வில் ஒளி கொடுத்த வள்ளல் அவன் 
விளக்கம் எனும் வட்டத்தில் அகப்படாத மாயன் அவன் 
களிக்களமாய்ப்  போர் நிகழ்த்தி கௌரவர்தம் சேனை கொன்றான் 
அளித்து விட்டேன் என்னை யான் கோவிலூரான் கழலடிக்கே 

9.   கழல் தொழுது நின்றார்க்கும்   கனவினிலும் மறவார்க்கும்  
நிழல் போல் தொடர்ந்து நிற்பான்   இங்கெம்மை  ஆளவந்தான் 
குழைந்த மனம் குவித்து  நெற்றியில் சுடர் கொள்வோர்க்கு 
தழலிடைப் பட்ட துளியாம் இப்பிறவிப் பெருங்கடல்  

10. கடல் போலும்  ஆசைகள் கனவு போலும் மயக்கங்கள் 
இடராய்  நம்மை சூழ்ந்திருக்க கண்ணன்  கண்ணில் தெரிவதில்லை  
உடலுக்குள் உயிராகும்   இருடீகேசனை நாம் காண 
படவரவதன் புற்றிற் போந்த வேத நாயகன் அருள்கவே

11. அருள்வதே அவன் குணம் ; கனிவதே அவன் மனம்  
இருள்வதே இயல்பாம்; பற்று மிகக்  கொண்டு  
மருள்வதேமானிடர் பிறப்பு; அகம் நீக்கித் தொழுவோர்க்கு 
தெருள் தர வந்து நின்றான்  திண்டீச்சரம் தன்னில் அவன் 

12. அவன் அருள்  கொண்டு  அவன் பாதம் நாடி  
சிவன் வளர்த்த தமிழால் அச்சுதன்  புகழ்  பாடி  
தவம் செய்யினும் கிட்டா பெரும்பேறு  கோடி 
இவன்  பெற்றதிங்கே பாண்டியர் கோவிலூர் தேடி  

13. தேடி வந்த பத்தருக்கு நாடி வந்த தருளுவான்  
பாடி வந்து போற்றுவோர்க்கு கோடி வினை நீக்குவான் 
கூடி வரும் கூற்றுமே அவன் அன்பரைக் கண்டஞ்சுமே
ஓடி வந்து காத்திடுவான் கோவிலூரின் காவலனே 


14. காவலாக நடுவில் நின்று  அகிலம்  காக்கும்  விந்தையே 
கோவிலூரில் வாழும் கருணை அதனின்றுதித்ததுண்மையே 
ஒன்றினின்று  மற்ற ஒன்று பிரிந்து வந்த  போதிலும் 
என்றுமே இரண்டுமே முழுமை மாறவில்லையே 


15. மாறாத பேருண்மை மாலவன் மட்டுமே 
தேறாத  மனிதருக்குத் தெளியாத தத்துவம் 
அசையாத சக்தி  அந்த  யோக நிலைதானே 
இசைவாகத் தாங்குமே அண்டங்கள்  யாவுமே

16. யாவுமே தானாகி நிற்பவன்   நம் நாரணன்  
நாவுமே  கொண்டு நாமம் கூறி விளித்த காலை
மேவுமே கண்ட  நால்  திசையும் பரவி நின்றே
தாவும் இம்மனதைக்  கொல் என் ஆழியோனே

17. ஆழி மகள் உடனிருக்க ஆதி சேடன் பாயாக 
ஆழியில்  உறங்கி  உலகாளும் தூயவனே 
ஊழியிலாங்கோர்  ஆலிலை உறைபவனே 
தாழிடேன் என் கதவை என்றும் ; வாராய் !

18. வாராதிருந்தது  சூது நிகழ்கையில்; எண்ணிப் 
பாராமல் வந்தது மங்கையின் மானம் காக்க;
கோராமலும் கொடுக்கும்  வள்ளலே முகில் வண்ணா 
நேராமல் தடுப்பாய் இனிப் பிறவி எமக்கே 

19. எமக்கென்றே கருது பொருள்  அது நுமதல்ல  காண் 
தமக்கென்று  பொருள்   வைத்து தருக்குடன் திரிவோரை 
சுமக்கும் பூமித்தாய் பழிப்பாள்; மதியிலீர் கேண்மின் 
நமக்கென்று நின்ற நாயகனைப் பணிமின் துறந்தே 


20. துறந்த பேர்க்கும் அகந்தை வருமே மாலவன் மாயை  விலக்குவதரிதாம் 
பிறந்து இங்கே வல்வினை சேர்த்தோம் பிறவி அறுக்கும் வழிதனை அறியோம் 
மறந்தும்  பலனை கருதாக் கருமம் புரிந்து வாழின் அவனடி சேர்வோம் 
திறந்த மனதில் மாறாக்  காதல் கொள்ளின் வருவான் நாரணன் உள்ளே 

21. உள்ளே இருக்கும் செருக்கெனும் அழுக்கை 
கிள்ளிக் களைந்து உளம் தூய்மையாக்கின் 
தெள்ளு தமிழ் வளர் பாண்டியர் கோமகன் 
துள்ளியே வருவான் மகிழ்ந்து நம்மகத்தே 


22. அகமே அச்சுதன் உறையும் ஆலயம் 
இகத்திலும் பரத்திலும் நன்மை நாடிடின் 
சகத்தின் வாழ்வினில்  தூய்மை பேணுவீர் 
முகம் மலர்ந்து வருவான் வைகுந்தன்  எதிரே 

23. எதிர்த்தோரும்  ஏற்றோரும்  ஒன்றெனவே காண்பானை 
புதிராகி  நிற்பானை  நம் அறிவுக்குள் அடங்கானை
கதிராகி என்றும்  நம் மருள் நீக்கும்  மாலவனை 
துதிப்போர்க்கு இல்லையென்றும் மாயை என்னும் இருளே

24. இருள் தனில் வினையாற்றும் பற்றுகொள் மாந்தரும்
அருள் நாடித் தவமியற்றும் காட்டிடை முனிவரும் 
பொருள் தேடிக் கலை  பயிலும் புலக்கில்லாப் புல்லரும்
பெருமை இலர்; உடையவன் அவனே காமங் கருதாதவன்

25. கருதாமல் வினையாற்றின்  மனம் இறக்கும்; ஒளி பிறக்கும்
பொருதாமல்  போர்க்களத்தில்  இருப்பேது  மானிடர்கள்
செருக்களத்தில்  சொன்ன   வேதம்  நண்ணியே  வாழ்வோர்க்கு 
கருத்திருமால்   கோவிலூரான்  அருள்வானே    பொன்றாப்   

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home