கோவிலூர் பதிகம்
1. கார் வண்ண மேனியாய் கனிவான தேவியர் சூழ
நேர் நின்ற கண்ணனே ! கோவிலூர் உறை நாரண !
பதினாறில் நினைப்பாடும் சிந்தை தாராமல் ;
பத்தாறு பிராயத்தில் நாவிலே வந்து நின்றாய்
இனி உள்ள காலம் நின்னை நினைந்துருகி
இனிய தமிழால் உளம் நிறைந்து உனைப் பாட
முற்றாய்ச் சூழ்ந்திருக்கும் பண்டை வல் வினையும்
பற்றும் அறுத்து என்னை உய்விக்க வாராயோ
கடிதான வாழ்விதிலே மாறி வரும் இருமை மாற்ற
முடிவில்லா உன் விளையாட்டை நிறுத்தி நீ நேரில் வா
2. நின்னை அடுத்திலேன் நல் எண்ணங்கள் வளர்த்திலேன்
முன்னைக் கருமங்கள் தொலைக்கவும் முயன்றிலேன்
பின்னைப் பிறவிகள் ஓர்த்தும் தீவினை நிறுத்திலேன்
என்னையே எண்ணி
வாழும் இக் கீழ்மை சற்று மாற்றி
உன்னையே சரண்
புகுந்து உன் கழல் பற்றி வீழும்
நன்மை என்னில் வாராதோ மூவுலகு
அளந்த பெரும!
சென்னி உன் பாதம்
வைத்தேன் சீராக என்னை ஆள்வாய்
பன்னிப் புனைந்த பாமாலை பரிவோடு
ஏற்றுக் கொள்வாய்
பின்னிப் பிணைந்த
இருவினையும் மாற்றி என்னை
உன்னிலே
சேர்த்தருள்வாய் கோவிலூர் வாழும் கோவே
3. ஊனுக்குள் உயிரை
வைத்து உடலுக்கோர் பெயரை வைத்தான்
நானென்ற அகந்தை
தன்னை அகத்திலே மறைத்து வைத்தான்
மானிடர் அறிவை
என்றும் மாயையால் மூடி வைத்தான்
தான் நேரில் நின்ற
பொழுதும் காணாமல் செய்து வைத்தான்
குருடராய் மாந்தர்
இங்கே மடமைகள் பலவும் செய்து
இருட்டிலே
கிடந்துழன்று ஏங்கியே அழுத போழ்தில்
எட்டிய சிலரை
மட்டும் ஒளி காட்டி அழைத்துச் சென்றான்
மட்டிலாக் கருணை கொண்ட மாயனுக்கிது
அழகோ
நானிலம்
மாலிருஞ்சோலை வானும் கடலும் அவன் வண்ணம்
ஏனிருப்பதின்னும்
இங்கே வழி காட்ட வா கோவிலூர்க் கோவே
4. சத்திக் குமிழ் தன்னை மாயையாம் சிமிழுக் குள்ளே
முத்தி பெற மூடி வைத்து ஆழ்கடலில் மிதக்க விட்டாய்
புத்தியே படகாக மனமே தான் பாய் மரமாய்
தத்தித் தாவி பேரலையில் திசையறியாதோர்
பயணம்
ஆசைக் காற்றின்
திசையினிலே அல்லாடிச் செல்கின்றேன்
ஆழ்கடலை கடக்கவோர் நாவாயாய் நீ வருவாய்
பாய்மரம் இல்லாது
சேயாக அருள் தருவாய்
ஆயர் பாடி தனை யாண்ட
யசோதை தன் பெரும்பிள்ளாய்
முடிவில்லா இரவின்
பின் வைகறையாம் ஆதவனே
அடி தொழுதேன்
இரங்குவாய் எம் கோவிலூர் மாதவனே
5. அளப்பரிய செல்வமும் அழகியதோர் இல்லமும்
உளம் குளிர மழலையும் உற்றவர்தம் அண்மையும்
அணிகலனும் ஆடைகளும் பணி செய்யும் மக்களும்
பிணியிலாப் பெரு வாழ்வும் அமைதியுறு முதுமையும்
இக வாழ்வின் நலமனைத்தும்
குறைவின்றிக் கிட்டுமே
புகல் என்றே கோவிலூரான்
கழல் பற்றும் பத்தருக்கே
மனமதில் நினைக் கொண்டு அகலாமல் தொழுவோரை
தினந்தோறும் கணந்தோறும் காத்தருளும் பேரருளே !
வற்றாத ஊற்றாக நெஞ்சினிலே உன் காதல்
எற்றைக்கும் நிலைத்திருக்க வரமருள்வாய் கோமகனே
6. ஆலம்தனை உண்ட வேத நாயகன் தானும்
ஞாலம் தனைப் படைத்த உந்தியில் உதித்தோனும்
கருதினும் கொல்லொணா அந்தண அரக்கனை
அரியதோர் அம்பினால் கொன்ற கோவிலூரான்
பாதங்கள் தம்மைப் பற்றியே வாழ்வோர்க்கு
நாதங்கள் நிறைந்த நல்லதோர்
இம்மையும்
மறுமையும் மாதவன் இணையடி நீழலும்
உறுதியாய்க் கிட்டுமே! நாராயணன் நாமம்
நாவினால் சொல்லி மனதினால் வந்திப்போர்
ஆவி தனை ப் பற்ற நமனும் அஞ்சுவனே
7. உடையாம் இந்த உடலுக்குள் உறைந்திருக்கும்
உயிர் நீயே
கடையை விரித்துக் காத்திருந்தும் கொளப்படாப் பொருள்
நீயே
மடை திறந்த வெள்ளமென ஆசைகள்தாம்
பெருகுகையில்
சடையன் தன் மைத்துனனை மூடர்
நாம் நினைந்திலமே
தடையில்லாப்
பேரின்பம் எதிரில் வந்தமர்ந்த போதும்
இடை நோக்கிச் சிற்றின்பம் நாடுகின்ற மானிடரே
படை கொண்டு
கூற்றுவன்தான் வரும் வரை காத்திராமல்
நடை போட்டு நாராயணன் கோவிலூரான் கோவிந்தனை
இடையறாது அறம்
புரக்கப் பிறந்தருளும் நாயகனை
அடைவீரே பாற்கடலை கணந் தோறும் துதிப்பீரேல்
8. உயிர் நிறுத்தக்க
உணவும் அறத்தின்
பயிர் தழைத்தக்க அளவுறு செயலும்
உடலும் உள்ளமும் நலமுற உறக்கமும்
கடமையாய்க் கருதிச்
செய்யின் யோகம்
கண்ணன் உரைத்த
நல்வாழ்வின் மந்திரம்
மண்ணில் உதித்தோர்
மனதில் இருத்தினால்
முனிவர்தாம் எய்திய
புகழ்மிகு வாழ்வு
கனிந்து வீழும் மடி
மேல்; தெளிவீர்
தென் பாண்டி காவலன் கோவிலூர்க்
கோமகன்
தன் பாதம் தருவான் அகம்
மிக மகிழ்ந்தே
9. இன்பம் துன்பம் ஒன்றாய்க் காண்போர்
அன்பே என்றும் யாண்டும் வைப்போர்
எங்கும் நிறைந்த மெய்யொளி தன்னை
தங்கா மனதில் அடங்காக் கருவை
அசையும் அசையா அழியா அணுவை
இசையும் உருவம் இல்லாப் பொருளை
நெஞ்சில் நிலையாய் நிறுத்தித் துதிப்போர்
தஞ்சம் அடையும் பத்தர் தமக்கு
பாண்டியர் நாயகன் கோவிலூர்க் கோமகன்
மீண்டும் பிறவாப் பெரு வாழ்வளிப்பான்
10. பன்னிரு பரிதியில் விட்டுவும் நீயே
மன்னு பதினொன்றில் சங்கரன் நீயே
மாதங்களில் குளிர்ந்த மார்கழி
நீயே
வேத மந்திரங்களில் காயத்ரி நீயே
இயக்கரில் செல்வன் குபேரன் நீயே
இயக்கும் புலன்களில் மனமும் நீயே .
மலர்களில் மணமிகு மல்லிகை நீயே
நலமுறு மறைகளில் சாமம் நீயே
திருமலை தன்னில் அருள்பவன் நீயே
இரு வினை அறுப்பாய் கோவிலூர்க் கோவே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home