Tuesday, June 19, 2018

சமீபத்தில்  என் மனைவி துபாயிலிருந்து  சென்னை கிளம்பிக் கொண்டிருந்தார்.  பெட்டியின் எடை பார்க்க வேண்டி இருந்ததால் தூக்கினேன். சாதாரணமாகத் தூக்கிப் பார்த்து எடை சொல்லி விடுவேன்.  மெஷினில் வைத்துப் பார்த்தால் சரியாக இருக்கும். அன்றும் இருந்தது. (22 கிலோ) விஷயம் அதுவல்ல.  தூக்கும்போது உணர்ந்த  சிரமம். முன்பெல்லாம் 25 கிலோ ஒரு கையில் அனாயாசமாகத்  தூக்குவேன். இப்போது சற்றுப் பிரயாசைப் பட வேண்டி இருக்கிறது.

நானும் என் மகனும்  (23) உருண்டு புரண்டு விளையாடுவோம். பலப் பரீட்சை நடக்கும். முன்பு  எப்போதும் நான்தான் ஜெயிப்பேன்  (என் மனைவி : "போதும் இந்த விளையாட்டு".) இப்போதும் நடக்கிறது.   ஆனால் நான் சீக்கிரம் தளர்கிறேன். என் மகன் அதை உணர்ந்து தோற்பது போல் நடிக்கிறான். பின்வாங்குகிறான். அவன் கண்களில் கவலை தெரிகிறது. (அப்பாவுக்கு வயசாயிடுச்சு) விட்டுக் கொடுக்கிறான். நானும் அதை அறியாதது போல் நடிக்கிறேன். 

என் வயதுக்கு (இந்த நவம்பரில் 60) இறைவன் கருணையில் சற்றுத் தெம்பாகத்தான் இருக்கிறேன்.  வேகமாக நடக்க முடிகிறது. உணவுக் கட்டுப்பாடும் எடை குறைத்தததும்ப்ராணாயாமமும்   காரணம்.   பரம்பரை  ஒரு காரணம்.  (அப்பா 86. இன்னும் ஆரோக்யமாக இருக்கிறார்) ஆனாலும் தசைகள் தளர்வது தெரிகிறது.  

ஓய்வு பெற்ற  பின் என்ன செய்வது என்பதைப் பற்றி முன்பே யோசித்து விட்டேன்.  பணம் துரத்தியாயிற்று. போதும். நிறையப் படிக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும்.  பேர் சொல்கிறாற் போல் ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும்.   அடுத்த  தலைமுறைக்குச் சில விஷயங்கள் சொல்ல ஆசை. என் மகனின் மகளின் நண்பர்கள் அனைவரும் எங்களின் நண்பர்களும் கூட. மகனோ மகளோ இல்லாவிடினும் கூட்டமாக வந்து எங்களோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள். என் மகன் இருந்தாலும் எல்லோரும் எங்கள் அறைக்கு வந்து மணிக் கணக்கில் பேசுவார்கள். இளைய தலைமுறையின் இந்த நெருக்கம் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. நான் சொல்வது அவர்களுக்குப் புரியும். 

பாலகுமாரன் ஒருமுறை சொன்னார். "வயதான பின் நாம் செய்ய வேண்டியது பேரப் பிள்ளைகளுக்கு முண்டா காண்பிப்பதல்ல. பல காரணங்களின் பொருட்டு  இது வரை புறக்கணித்த இயற்கையை உற்றுப் பார்ப்பது. அதன் ப்ரம்மாண்டத்தை  உணர்வது."

#Ageing 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home