"ல" வுக்கும் "ள" வுக்கும் மற்றும் "ர" வுக்கும் "ற" வுக்கும் வேறுபாடு அறியாது தமிழில் பதிவிடுகிறார்கள்.
"பள்ளி கொள்" என்று எழுதச் சொன்னால் "பல்லி கொல்" என்கிறார்கள். தமிழ் கொல்லும் இக்கூட்டத்தை என்ன செய்வது? ஒரு கையாலாகாத கோபம் மேலிடுகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ள இந்நிலையில் இப்பதிவு முக்கியமாகிறது. மொழி ரீதியாக இதை அணுகுவது சரியில்லை. அப்படிப் பார்த்தால் எம் ஜி ஆர் தமிழரல்ல. கருணாநிதி அண்ணா விஜயகாந்த் மற்றும் வை கோ போன்றோர் கூடத் தெலுங்கர்கள் என்று கேட்டிருக்கிறேன். ஜெயலலிதா ஒரு கன்னடர் என்கிறார்கள். எந்த மொழியானால் என்ன? அவர்கள் இந்தியர்கள். அது போதும்.
தமிழர் வேற்று நாட்டில் அமைச்சரானால் பதவி பெற்றால் கொண்டாடும் நாம் மொழி அடிப்படையில் ரஜினியை எப்படி எதிர்க்கலாம். இது ஒரு குறுகிய மனப்பான்மை.
ஒரு மன நோய்.
நடிகர் அரசியலுக்கு வரக் கூடாது என்கிறார்கள். அப்படியானால் எம் ஜி யாரை ஜெயலலிதாவை விஜயகாந்தை எப்படி ஏற்றோம்? அண்ணாவும் கருணாநிதியும் இப்போதைய சீமான் வரை
திரைத் துறையிலிருந்து வந்தவர்கள் தானே?
பலரும் ரஜினியை விமர்சிக்கிறார்கள். என்னவோ அவர் பல கோடி சம்பாதிப்பது ஒரு பாபம் என்பது போல் பேசுகிறார்கள். தமிழ் நாட்டுக்கு அவர் பங்களிப்பு என்ன என்று கேட்கிறார்கள். உங்களை உயர்த்தியது நாங்கள்தானே என்று அங்கலாய்ப்பு வேறு. இது ஒரு தனி மனிதனின் உழைப்பு. உங்களை அவர் ஏமாற்றவில்லை. நீங்கள் காசு கொடுத்துப் படம் பார்த்தீர்கள். உங்கள் சந்தோஷத்திற்காக. அவர் படத்தில் நடித்தார் பணம் சம்பாதிக்க. அது அவர் தொழில். இதில் தமிழ்நாட்டிற்குச் சேவை செய்ய ஒரு நிர்பந்தமும் இல்லை. இங்கே இன்வெஸ்ட் செய்யவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு. மாறி மாறி வரும் மொழிப பிரச்னை மாநிலப் பிரச்னை அவரைப் பயமுறுத்தி இருக்கலாம். நம் நாட்டில் மாநிலப் பிரச்னை என்றால் இங்கே கன்னடர்களுக்கு அடி அங்கே தமிழர்களுக்கு அடி என்கிற நிலைமை இருக்கிறதே. என்றேனும் ஒருநாள் கடை கட்ட வேண்டி வந்தால் நம் ஊருக்குப் போய்விடலாம் என்கிற பாதுகாப்பின்மை உணர்வாய் இருக்கலாம். ஒருவர் எங்கே இன்வெஸ்ட் செய்ய வேண்டும் எவ்வளவு தான தர்மம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்.
எனக்கு ஒன்று தோன்றுகிறது. இது வெறும் பொறாமை. அடேயப்பா இவ்வளவு உயரமா இவ்வளவு பணமா என்கிற ஆத்திரம்.நமக்கு ஏதேனும் கிடைக்காதா என்கிற நப்பாசை. பேராசை. என்னுடைய ஆயிரம் ரூபாயும் அதில் இருக்கிறதே என்று ஒரு மொட்டை நியாயம். இதன் அடிப்படைக் காரணம் ஊடகங்கள். முன்பும் படங்கள் ஓடியதுண்டு ஆனால் இப்போது போல் புள்ளி விவரங்கள் சாமான்ய மனிதனை எட்டவில்லை. 500 கோடியாமே என்று வாய் பிளப்பது அதில் தான். எந்த ஊடகங்களால் வியாபாரம் நடை பெற்றதோ அதே ஊடகங்கள் புள்ளி விவரங்களையும் பரப்புகின்றன.
நான் கேட்கிறேன். மூவாயிரம் கொடுத்து ரஜினி டிக்கட் வாங்கச் சொன்னாரா. உங்கள் முனைப்பு, வெறி சினிமா எடுப்பவரின் லாபம். மூன்று நாள் கழித்துப் பார்த்தால் என்ன? ஒரு வாரம் கழித்துப் பார்த்தால் டிக்கட் மூவாயிரம் விற்குமா? ஏன் முதல் நாள் முதல் ஷோ ? காலரைத்தூக்கி வீட்டுக் கொள்ள நீங்கள் செய்தது எப்படி நடிகரின் தவறாகும்? நீங்கள் ஒன்றும் தியாகம் செய்து அவரைத் தூக்கி விடவில்லை. லீவு போட்டுவிட்டு சினிமாவுக்குப் போனது அவர் குற்றமா?
தமிழன் என்கிறீர்களே? கலை என்று வரும்போது, வியாபாரம் என்று வரும்போது, பொழுது போக்கு எனும் போது மொழி எங்கே வருகிறது? இப்படிச் சொல்கிறவர்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் இல்லை. அது ஒரு குற்றமாக எனக்குப் படவும் இல்லை. தங்களின் அநியாயமான குற்றச்சாட்டிற்கு ஒரு ஆதரவு சேர்க்கவே இந்த மொழிப் பிரச்னையை எழுப்புகிறார்கள் என்று தோன்றுகிறது. தமிழரல்லாதோர் இங்கே வென்றால் அது தமிழர்களின் பாரபட்சமற்ற ரசிகத்தன்மையையே குறிக்கிறது . அது நமக்குப் பெருமையே.
இது ஒன்றும் ரஜினிக்கு வக்காலத்து இல்லை. ஏதோ படம் பார்த்தோம் போனோம் என்றில்லாமல் நடிகனின் சம்பாத்தியம் எவ்வளவு என்று அலசுவதும் அவர் தனிப்பட்ட வாழ்வை விமரிசிப்பதும் அநாகரிகம் என்று பட்டது.
சமூகப் பொறுப்பும் பங்களிப்பும் (social responsibility) அவரவர் மனச்சாட்சியைப் பொறுத்த விஷயம்.
ரஜினி எங்குமே ஒன்றுமே செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது. கர்நாடகாவில் அவர் செய்கிறார் என்று அவருடைய விமர்சகர்களே சொல்கிறார்கள். தவிர பல நலிந்த கலைஞர்களுக்குப் படம் செய்து கொடுத்துள்ளது உண்மை. அதில் அவர் மொழி மாநில பேதம் பார்த்ததாகத் தெரியவில்லை.
ரஜினி எங்குமே ஒன்றுமே செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது. கர்நாடகாவில் அவர் செய்கிறார் என்று அவருடைய விமர்சகர்களே சொல்கிறார்கள். தவிர பல நலிந்த கலைஞர்களுக்குப் படம் செய்து கொடுத்துள்ளது உண்மை. அதில் அவர் மொழி மாநில பேதம் பார்த்ததாகத் தெரியவில்லை.
வென்றோரைக் கண்டு காய்தலும் தோற்றோர் முகத்தில் உமிழ்தலும் அறிவிலிகள் செய்யும் காரியம். ஒரு திரைப் படத்திற்கு அதற்கு உரிய மரியாதையை மட்டும் கொடுங்கள். கபாலி படம் வெளியாகி இருக்கிறதா சரி அடுத்த வாரம் குடும்பத்தோடு போகலாம் என்று நினைத்து செயல் பட்டிருந்தால் அது தவறில்லை.
யாரோ பெற்ற வெற்றியில் பங்கு தேடாதீர்கள். அதற்கு நானும் காரணம் என்பது சரியில்லை. இப்படி மற்றவர் வெற்றியைக் கண்டு மலைத்து நின்று வெட்டிக்கதைகள் பேசி நின்றால் வெல்லும் வாய்ப்பே இல்லை.. இதை விட நம்மை நாம் இழிவு படுத்திக்கொள்ளவே முடியாது.
சுஜாதா நம்மவர்களிடம் ஒரு phillistinism இருக்கிறது என்று எழுதிய போது உறுத்தியது. அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது.


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home