திரு பாலகுமாரனோடு என் முதல் உரையாடல் தொலை பேசியில். நான் அவருடைய வாசகன். ஆனால் என் மனைவி அவருடைய முக நூல் தோழி. எனக்கு அவரிடம் உள்ள ஈடுபாட்டை அறிந்து என் பிறந்த நாள் பரிசாக அவருடைய அறிமுகத்தை அளித்தாள் என் மனைவி .
இன்றும் அதை நான் நெகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்.
நான் கடைசியாக அவரைக் கண்டது போன வருடம் அக்டோபரில் . எங்களிடம் சத்குரு ராம்சுரத்குமார் ஜெயந்தியின் அன்னதானத்திற்குப் பணம் தரும்படி உரிமையுடன் கேட்டார். மகிழ்ச்சியுடன் கொடுத்தோம். பிறகு " இத்தகைய தர்ம காரியங்களுக்கு எல்லாச் செலவும் நாங்களே ஏற்கும்படி சக்தி வேண்டும். அதற்கு ஆசீர்வதியுங்கள் " என்று வேண்டினோம் .
அதற்கு அவர் சொன்னார் "நிச்சயம் செய்வீர்கள். ஆனால் நான் வாங்க மாட்டேன் " ஓயாமல் ஜபம் செய்யும் வாய் . பலித்தே விட்டது.
அவர் கையைத் தொடும்போது அவர் தியானத்தின் உக்கிரம் விளங்கும். உடல் சிலிர்க்கும். அவர் நட்பு கடவுள் கொடுத்த வரம். கவியரசு கண்ணதாசனைக் கண்டு பேச முடியவில்லை என்கிற மாபெரும் மனக்குறை இன்று வரை எனக்குண்டு. பாலகுமாரனைக் கண்டு பேச முடியாமல் போயிருந்தால் அது தீர்க்க முடியாத பெருங்குறையாய்ப் போயிருக்கும். அக்குறை இல்லாமல் செய்த என் இனிய ஸ்நேகிதியான என் மனைவிக்கு என்றும் என் நன்றி.
என் வாழ்வைத் செம்மைப் படுத்திய வழிகாட்டி அவர். என்னைப் போல் பலர் உண்டு இங்கே. அவர் எழுத்து ஒரு கலங்கரை விளக்கம். ஒரு ஒளி. ஒளிக்கு மரணம் ஏது? அழிவேது ?


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home