Thursday, May 31, 2018

அரக்கர்தம் ஏந்திழை தன்னை அன்புடன் மறுதலித்து
இரக்கமில் இராக்கதர் கூட்டம் தனி நின்று வதைத்த வீர!
கரந்துறை அவுணர் என்னில் நால்வர் உளதறியாயோ -அருட்
கரம்  கொண்டு காப்பாய்  எம்மை தானவர் தம்மை மாய்த்தே

உன் வாழ்க்கை என்பது இறைவன் படைத்த துன்பச்  சுவைக்  காவியம்
நீ அந்தக் கலைஞன் தீட்டிய துயரம் சிந்தும் ஓவியம்
நீரோடும் ஓடையாய்த் துள்ள வேண்டிய பதின் பருவப் பெண்மை
போராடத்  தயாராகிக் களம்  கண்டது உலகம் கண்ட உண்மை
கொண்டவன் கொடுத்தே நீங்கினான் உன்னை மூன்று செல்வங்களை
ஆண்டவன் கையில் என்றாயிற்று உன் விதி இளமையின் வாயிலில்
சொல்லொணாக் கொடுமைகள் பட்ட போதும் மக்களிடம் சோகம் உரைத்திலை
நல்லிதயம் உனது; தந்தை எனும் மதிப்பை உன் வெறுப்பில் கரைத்திலை
காமனை எரித்த ஈசனே காஞ்சியின்  மகானாய் அவதரித்தான்
"நாமிருக்க பயமேன்" என்றே உன் சிரத்தில் கை  வைத்து ஆதரித்தான் 
முனிவன் வரத்தால் மலர்ந்தது வாழ்வு சேர்ந்தது இனிமை
சனி பார்த்தோ எவன் பார்த்தோ குலைந்தது அமைதி மீண்டும் தனிமை
இடர்களை எதிர் கொள்ள உன்னிடம் கற்றால் வாழ்வில் தோல்வியில்லை
திட மனது அது உனது கண்டவர் மலைப்பர் இதில் ஐயமில்லை
சூழ்ந்த துன்பம் விலகும் தாயே மேகங்கள் தங்குவதில்லை
ஆழ்ந்ததோர் நம்பிக்கை அவனிடம் வை; அச்சம் வேண்டியதில்லை
புவியினில் மாறுதல் இயல்பன்றோ; இது இலையுதிர் காலமே
கவி வாக்கு பொய்யில்லை நீ மீண்டும் காண்பாய் வசந்த காலமே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home