Thursday, February 8, 2018

என்னவளுக்கு ஒரு சிறு நன்றி நவிலல் இக் கவிதை முயற்சி 

சேரநாட்டின் தேவதை தொண்டை நாட்டி லுதித்தெனைச்
சேர வேண்டி வந்தனள்  அண்டை வீட்டு அழகியாய்

கோதையொத்த  வயதினள்  தென்றலாய்  மிதந்தனள்  
காதையாகி  நீண்டதே  அன்றுதித்த  காதலே 

அறுபதாய  போதிலும்  ஆர்க்குமே  என்  மனம்
மறுத்திடாமல் அன்று  நீ  காதல் சொன்ன  தெண்ணியே

நிறைத்தனை எம்மை நீ அன்பெனும் அமுதினால் 
இறைத்தன்மை என்பதை உன்னிலே காட்டினை

வாழ்வெனும் நதியிலே வளைவுகள் வந்தன
தாழ்விலும் சோர்வுறாது தாங்கியே பிடித்தனை

என்னவர் உன்னவர் வேறுபா டின்றியே
தன்னிகரில்லா உந்தன்  அன்பினால் ஆண்டனை

என் பாதை உன் பாதை என் எண்ணம் உன் எண்ணம்
என் விருப்பே உன் விருப்பு என் முடிவே உன் முடிவு

அன்பையே பெண்ணாக்கி என் வாழ்வில் ஒளி கூட்ட
முன் செய்த நல் வினையால் நான் பெற்ற வரமே

பாங்காக வாழ்கின்றோம்  ஈருடலாய் ஓருயிராய்
நீங்காமல் இறை சேர குருவருள் நிறைகவே 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home