Wednesday, April 6, 2016

என் தமிழ் இளைஞர்கட்கு

புலம் பெயர்ந்த  தமிழன் என்பதில் எனக்கோர் பெருமிதம்  
வேற்று நாட்டில் தமிழரைக் காண்பதிலோர் மகிழ்ச்சி 
ஐந்து மொழி அறிவேன்; ஆயினும் 
நேரில் நிற்பவர் தமிழரென்றால்  உரையாடல் தமிழில்தான்  
ஆனால் இளைஞனே ஆங்கிலம் அற்பமல்ல இந்தியும்தான் 
உன்னை நீ மதித்தால் மற்றவரை மதிப்பாய் 
உன் மொழியைக் காதலி;
 மற்ற மொழிகளை வெறுக்காதே 
பாரதியை விடத்  தமிழ்ப் பற்று யாருக்குண்டு 
அவன் பல் மொழிப் புலமை அறிவாயா  
தமிழர் தம் பெருமை கடல் கடக்க வேணுமெனில் 
துமியளவும் தயங்காது நாம் பல் மொழி பயிலல் வேண்டும் 
உன்னை உலகிற்கு உரைக்க 
உன் மொழி மட்டும் போதாது 
காலத்தில் கல்வி கொள்; அறிவு வளர் 
ஞாலம் பயனுற உழை; உரை ;
ஆனால் தமிழனெனும் அடையாளம்  தொலைக்காதே;
அதுவே உன் மொழிக்கு நீ ஆற்றும் தொண்டு 
தமிழ் சிறக்க நீ சிறக்க வேண்டும் 
உனக்குச் சோறிடப்போவது 
உன் அறிவே; அரசியல்வாதியல்ல 
பிற மொழி கற்கக் கூடாதென்போர் உண்டு  இங்கே 
வாலறுந்த நரிகளின் கூட்டம் !  நம்பாதே !
எட்டி நோக்கினால் அவர் வீட்டில் உள்ளோர் 
எட்டு மொழி  கற்றிருப்பர்; கண்டு அதிர்வாய்; உன்னை 
முட்டாளாக்கித் தெருவில் நிறுத்தித் தங்கள் 
தட்டில் மட்டும் உணவு நிறைக்கும் கூட்டம் 
அன்று அவர் பின்னே போனவரை  இன்று கேட்டுப் பார் 
என்றும் மாறாச் சோகம் உரைப்பர் 
திறமை வளர்த்துப் பல் மொழி பயின்று 
பறந்து உன் ஊரை விட்டு வெளியில் வா ! 
புலம் பெயர்ந்து பார் - உன் 
பலம் உனக்குப் புரியும் 
உன்னை ஊரோடு கட்டிப் போட்டுத் 
தன்  வாக்கு எண்ணிக்கை கூட்டுபவரைப் 
பின்பற்றாதே ! தமிழன் என்றும் புலம் பெயர்வதில் 
முன்னோடி ! ஐயமிருந்தால் சுற்றிப்பார் 
சிங்கையும் மலேசியாவும் மியான்மரும் 
சிங்களத் தீவும் சொல்லும்! தமிழின் 
இளமையும் தமிழ் நாட்டின் இனிமையும் தமிழர்தம் 
வளமையும் அறிய வேண்டின், புறப்படு !
பிழைத்ததோர் வழியைப் 
பிழைக்கும் வழியாய்க் கொண்டோர் உறவகற்று 
உழைத்து உயர் 
தழைக்கும் உன் வாழ்க்கை 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home