பட்டம் பெற்றும்
வேலையில்லாத இளைஞர்களுக்கு
சமீபத்தில் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கல்வி வாய்ப்புகளைப் பற்றிய அலசல் கண்டேன். பல வல்லுநர்கள் மிக உபயோகமான தகவல்களைத் தந்தார்கள். அதிகம் அறியப்படாத ஆனால் வாய்ப்புகள் அதிகம் இருக்கிற துறைகள் அவைகளுக்கு எப்படி மனுச் செய்வது போன்ற அரிய தகவல்கள். ('' எம் பி ஏ ன்னு போறாங்க. ஆனால் அவங்க போறது ஒரு கிளெரிகல் அல்லது ஒரு சேல்ஸ் மேன் வேலைக்குத்தான்")
ஒரு டிவியில் செய்தி. எம் பி ஏ மற்றும் எஞ்சினியரிங் பட்டதாரிகள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ் மேன் வேலைக்கு மனுச் செய்து நிற்கிறார்கள். அந்த இளைஞர்கள் முகத்தில் ஆதங்கம் ஆத்திரம் .
இந்த அம்சம் எனக்குக் கவலை அளிக்கிறது. படித்து வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் அதிகம் இருப்பது ஒரு நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லதல்ல.
பொதுவாக கல்வித் தகுதிக்கும் வேலைக்கும்
சம்பந்தமில்லாத ஒரு நிலை அதிகம் காணப்படுகிறது. Employability என்று சொல்லப்படுகிற ஒரு விஷயம். அதாவது ஒரு பட்டதாரி எந்த வேலையும் அறியாதவராக ஒரு நிறுவனத்தால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படத் தகுதி இல்லாதவராக இருக்கும் நிலைமை.. அவரால் நிறுவனத்திற்கு உடனடி உபயோகம் ஏதுமில்லை. எடுத்து முதலில் பயிற்சி அளிக்க வேண்டும் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குப் பின்பே அவரால் நிறுவனத்திற்கு ஏதாவது பயன் இருக்கும்.
இது தவிர இன்றைய மாணவர்களில் பெரும்பான்மையினரிடம் ஒரு குறை இருக்கிறது. இப்போது எஞ்சினியரிங் சீட்டுகள் மலிந்து விட்டது உண்மை. அதனாலேயே கற்க வரும் மாணவர்களின் முனைப்பும் குறைந்து விட்டது. முன்பெல்லாம் பி ஏ சீட் கிடைத்தது போல் இப்போது எஞ்சினியரிங் சீட்டுகள் கிடைக்கின்றன. இவர்களும் ஒரு கலைக் கல்லூரி மனப்பான்மையிலேயே இதை அணுகுகிறார்கள். இவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது எஞ்சினியரிங் ஒரு தொழிற் கல்வி. அடிப்படை நுணுக்கங்களைக் கல்லூரியில் பயின்ற பிறகு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அடிப்படைப் பயிற்சி. அதன் பின்பே உங்கள் வேலை ஆரம்பம். பின்பு உங்கள் திறமையையும் உழைப்பையும் பொறுத்து உங்கள் முன்னேற்றம், இதுதான் யதார்த்தம்.
ஆனால் இன்று “பத்து பேப்பர் அரியர்ஸ் மாமே" என்பது பெருமையாகி விட்டது. அந்தப் பத்து பேப்பரையும் முடித்து வெளியே வரும்போது வேலை கிடைப்பது அரிதாகி விடுகிறது. 'நான் ஒரு பொறியியல் பட்டதாரி எனக்கு வேலை கிடைக்கவில்லை' என்று கிடைக்கும் காமெராவின் முன் குமுறுகிறார்கள்; உறுமுகிறார்கள்; தொலைக்காட்சிகளுக்கு இது ஒரு ஹாட் நியூஸ். எதிர்க்கட்சிகளுக்கு அரசைக் குறை சொல்ல வாய்ப்பு.
இவர்களிடம்
பொதுவாகக் காணப்படும் ஒரு குணம் உண்டு. வெளிநாடு சென்று உயர் கல்வி கற்பவர்களைப் பார்த்துப் பொருமல் , அப்படிக் கற்று இன்று நன்றாகச் சம்பாதிப்பவர்களைக் கண்டு பொறாமை . உடனே நானும் அப்படிச் சம்பாதிக்க மாட்டேனா என்ற ஆவேசம்.
வெளிநாடு
சென்று உயர் கல்வி கற்பவர்கள் எல்லோரும் அதை ஒரே நாளில் அடையவில்லை. அவர்கள் உங்களில் ஒருவராகத்தான் கல்லூரியில் இருந்தார்கள். அவர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. கும்பலில் இருந்து கழற்றிக் கொள்வார்கள்; திடீரென்று காணாமல் போவார்கள்; படிக்க வேண்டிய நேரத்தில் படித்தார்கள்; அவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று ஒரு நிச்சயத்தில் இருந்தார்கள்; அதற்காக விஷயம் தெரிந்தவர்களை அணுகினார்கள்; தொடர்பு கொண்டார்கள்; விவரங்கள் சேகரித்தார்கள்;
ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும்; அவர்கள் அனைவருமே செல்வந்தர்கள் அல்ல; பலரும் கீழ் மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். இந்த வகை மாணவர்கள் ஒரு சாதியை மட்டும் சார்ந்தவர்கள் அல்ல. உயர்கல்விக்கு அவர்கள் கொடுத்த விலை அதிகம். அவர்கள்
உங்களோடு ஜாலியாகவும் இருந்தார்கள். ஆனால் நீங்கள் ஜாலியாக மட்டுமே இருந்தீர்கள்.
இது ஏதோ பொறியியியல் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று எண்ண வேண்டாம். கலைக் கல்லூரி மாணவர்கள் நிலை இன்னும் மோசம். இவர்களில் பெரும்பாலோர் கல்லூரி வாழ்க்கையை ஒரு பிக்னிக்காக நினைப்பவர்கள். கலைக் கல்லூரிகளில்
பட்டம் பெற்றாலே
இவர்கள் பாடு திண்டாட்டம். அதிலும் சரியாகத் தேறாதவர்களை என்ன சொல்ல? தவிர கலைக் கல்லூரிப் பட்டம் தொழிற் கல்வி அல்ல.
இன்று ஐ டி கம்பெனிகளின் கவனம் கலைக் கல்லூரிகள் பக்கம் திரும்பி இருக்கிறது. இது ஒரு விதத்தில் நல்லது. ஏனென்றால் இவர்களுக்குக் கொஞ்சம் அதிகச் சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு இதனால் உருவாகியிருக்கிறது. ஆனாலும் உள்ளே சென்ற பின்பு தங்களை வளர்த்துக் கொள்ளாவிடில் தேங்கி விடும் ஆபத்து இருக்கிறது.
இன்று வரை நம் நாட்டில் கலைக் கல்லூரிகளின் அவசியம் எனக்குப் புரியவில்லை. நம் கலைக் கல்லூரிகள் ஆங்கிலேயரால் அன்றைய இந்தியர்களுக்காக உருவாக்கப் பட்டவை, கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் கணக்குத் தெரிந்த குமாஸ்தாக்களை உருவாக்கி அடிமைப் பணி செய்விக்க ஆரம்பிக்கப் பட்டவை.
நான் மேற்குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சியில் பி ஏ சரித்திரம் படித்தால் கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் அப்படி ஒரு நோக்கத்தோடு இன்று யாரும் சரித்திரம் படிப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு டிகிரி என்று தான் படிக்கிறார்கள். ஆனால் வருமானத்தை ஒப்பிடும்போது உயர்கல்வி கற்றவர்களோடு மெத்தப் படித்தவர்களோடு ஒப்பிட்டுக் கொண்டு ஏமாற்றமும் கோபமும் அடைகிறார்கள்.
இவர்கள் படித்த படிப்பிற்கு என்ன வேலை இவர்களால் செய்ய முடியும்? இவர்களுக்கு என்ன தெரியும்? இவர்களுக்கு என்ன வேலை யார் கொடுப்பார்கள்? கொஞ்சமாவது விஷயம் தெரிந்தவர்களாக இவர்களை மாற்ற மிகுந்த முயற்சி தேவை. அகவே இவர்களின் ஆரம்ப சம்பளம் மிகக் குறைவாகவே இருக்கும். இதை இந்த நிதர்சனத்தை இவர்கள் மிகத் தாமதமாகவே உணர்கிறார்கள்.
மாணவப் பருவம், இளமை கொண்டாட்டத்திற்குரியது. இளமையின் அனுமதிக்கப்பட்ட மீறல்களை அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால் இளமை உங்கள் முதலீடும் கூட.. உங்கள் இளமையை நீங்கள் எதில் செலவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் எதிர் காலமும் முதுமையும் அமையும். மறக்க வேண்டாம். தவிர உங்கள் கல்லூரிக் காலத்தை நீங்கள் எப்படிக் கழித்தீர்கள் என்பதை உங்கள் இன்றைய நிலைமை சொல்லி விடும்.
இவர்களுக்குத் திறமையை வளர்த்துக் கொள்ளும் எண்ணமில்லை. என்னால் ஒரு முதலாளிக்கு என்ன உபயோகம் என்று இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. அவன் நாப்பதாயிரம் வாங்கறான் இவன் அம்பதாயிரம் வாங்கறான் எனக்கும் குடு என்கிற மனப் பான்மைதான் உள்ளது. அப்படி வாங்குகிறவனுக்கு என்ன தெரியும் அது எனக்குத் தெரியுமா என்று ஆராய்வதில்லை.
சரி. டிகிரி வாங்கியாகி விட்டது. உடனே ஐ டி கம்பெனி. இது அவசியமில்லாத ஒன்று. நீங்கள் எந்தத் துறையில் படித்தீர்களோ அதே துறையில் உள்ள கம்பெனிகளைத் தேடிச் சென்று வேலையில் சேருங்கள். ஐ டி கம்பெனி வேலை கிடைத்தும் அப்படிச் சேர்ந்த மாணவனை நானறிவேன். தொலை நோக்கோடு முடிவெடுங்கள். உடனடியாகக் கிடைக்கும் தற்காலிக லாபத்துக்காக உங்கள் எதிர் காலத்தை இழக்காதீர்கள்.
ஐ டி கம்பெனி சம்பளம் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏன் என்றால் பதினைந்து வருடங்கள் கழித்து உங்கள் துறையில் கொடி கட்டிப் பறக்கலாம். ஐ டி கம்பெனிகள் ஆரம்பத்தில் சம்பளம் அதிகம் கொடுத்தாலும் உங்களை ஒரு ஐ டி நபராக மாற்றவே முயற்சிக்கும். அதாவது நீங்கள் ஐ டி துறையில் ஒரு பட்டப் படிப்பிற்குச் சமமாகக் கற்க வேண்டும் . கற்கத் தவறினால் உங்கள் முன்னேற்றம் தடைப் படும். அதிகச் சம்பளம் என்று படிப்பிற்குச் சம்பந்தமின்றி ஐ டி கம்பெனியில் சேர்கிற பல மாணவர்கள் கதி இதுதான்.
இது ஐ டி கம்பெனிகளுக்கு எதிரான பிரச்சாரமல்ல. அந்தத் துறையில் சாதித்தவர்கள் அதுதான் வேண்டும் என்று படித்துத் திறமையை வளர்த்துக் கொண்டவர்கள். இன்று உலகம் முழுதும் அந்தத் துறையில் சாதிப்பது நம் இந்தியர்களே என்ற பெருமிதம் எனக்குண்டு. ஆனால் ஆர்வமின்றி உடனே
கிடைக்கிற உபரிப் பத்தாயிரத்திற்காக ஐடி கம்பெனி வேலையில் சேர்ந்து விட்டுப் பின் வருந்தாதீர்கள்.
சினிமாவை
நம்பாதீர்கள். படிக்காமல்
அல்லது பன்னிரண்டு பேப்பர் அரியர்ஸுடன் ஆட்டோ ஒட்டி
கூலி வேலை செய்து கல் உடைத்து ஆறு கோடி ரூபாய் அறுபது நாளில் சம்பாதிப்பது
சினிமாவில் மட்டுமே சாத்தியம்..
வெற்றிக்குக் குறுக்கு வழி ஏதுமில்லை. திறமை தகுதி இவற்றை வளர்த்துக் கொள்ளாமல் ஆசைப் படாதீர்கள். அந்த ஆசை உங்களை சமூக விரோதிகளிடம் கொண்டு சேர்த்து விடும்.
இன்று வரை நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இனியாவது உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். ஒரு பாதை வகுத்துக் கொண்டு
கடுமையாக உழைத்தால் உங்கள் பிற்காலம் பொற்காலம்..


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home