அம்பு
அவன் தலை குனிந்தவாறு நடந்து கொண்டிருந்தான். சுற்றிலும் மரண ஓலங்கள்; முனகல்கள்; ரத்தச் சேறு ; வெட்டப் பட்ட அவயவங்கள்; தலையற்ற உடல்கள் மிருகங்களின் சடலங்கள் இவை எதுவும் அவனை எட்டவில்லை; அது ரண பூமி; விடிந்தால் போர்; அனேகமாக அவன் கடைசிப் போர்; அவன் காதுகளில் ஒற்றர்களின் கூற்று ஒலித்தது:
" மகாராஜா!! அர்ஜுனன் நாளை சூரியன் மறைவதற்குள் அவன் மகன் இறக்கக் காரணமான உங்களைக் கொல்ல சபதம் மேற்கொண்டுள்ளான் . இயலாவிடில் தீப்பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சூளுரைத்திருக்கிறான்".
அவன், சிந்து ராஜன், மரணத்தைக் கண்டு பயப்படவில்லை; அவனும் மகா வீரன்; ஜயத்ரதன் என்றால் வெற்றி வீரன் என்று பொருள்; ஆனால் அவனுள் கேள்விகள் இருந்தன.
ஒரு வீரனாக அவன் அந்தக் குழந்தையின் மரணத்திற்கு வருந்தினான்; வியூகம் உடையாமல் தடுத்ததோடு அவன் பங்கு முடிந்தது. அனால் ஆறு மாவீரர்கள் சுற்றி நின்று ஒரு குழந்தையைக் கொன்ற கொடுமை அவனையும் பாதித்தது; அதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை; ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்திருந்தால் அவனும் அதில் பங்கு கொண்டிருந்திருப்பான் ; இது யுத்தம் ; போர் தொடங்கிய பிறகு நியதிகள் மறக்கப் படுவதே நியதியாகி விட்டது.
எப்பேர்ப்பட்ட வீரன்; என்ன லாகவம்; கொஞ்ச நேரம் கௌரவப் படையைக் கலக்கி விட்டானே ; யாரை எல்லாம் எதிர்த்துப் போரிட்டான்! அவர்கள் அனைவரும் ஒரு தனியாளாக ஒரு படையைத் தோற்கடிக்கும் வல்லமை கொண்டவர்கள் ஆயிற்றே. மற்றப் பண்டவர்களோடு போரிட்டதில் அவனோடு சண்டையிடவோ அவன் போர்த்திறமையைப் பார்க்கவோ வாய்ப்பின்றிப் போய் விட்டது. அனேகமாக அன்று போரிட்ட எல்லோரும் அபிமன்யுவைப் போல் ஒரு மகன் தனக்கு இருக்கலாகாதா என்றே ஏங்கினார்கள்; அவனைப் போலவே.
அவன் கால்கள் நடந்தன; ஆச்சார்யரின் பாசறையை நோக்கி; அவர் மட்டுமே தன கேள்விகட்கு விடையளிக்க முடியும் என்று அவன் நம்பினான் . இதோ அவன் தேடி வந்த பாசறை .
“வணக்கம் ஆச்சார்யரே”
“நீடூழி வாழ்க சிந்து அரசே இந்நேரம் இங்கே என்ன செய்கிறாய் ஓய்வெடுத்தால் அல்லவோ நாளை போர் புரிய இயலும் ?”
“என் மனதில் உள்ள கேள்விகள் ஓய்வுக்கு என்னை அனுமதிக்கவில்லை குருவே”
“கேள்விகளின்
நேரமா இது சிந்து அரசே? இது போர் பூமியாயிற்றே”
“கற்பவனுக்கு
எல்லா இடமும் குருகுலமதான் ஆச்சார்யரே தவிர
குரு என்றுமே குருதானே”
“நீ
ஒரு நல்ல மாணவன் சைந்தவா ! உன்னைப் போன்ற மாணவர்களால் தான் ஆசிரியர்கட்குப் பெருமை”
“அப்படியானால்
அப்பெருமை இன்று சோதனைக்குள்ளகியிருக்கிறது ஆச்சார்யரே”
“என்ன
சொல்கிறாய் அரசே?”
“இன்று
நடந்தது நீங்கள் அறியாததல்ல; அபிமன்யு மரணமும்
அர்ஜுனன் சபதமும்”
“அறிவேன்
அரசே அதனால் என்ன?”
“எப்படி
ஆச்சார்யரே எங்கள் அனைவர்க்கும் நீங்கள் தானே கற்பித்தீர்? எப்படி அர்ஜுனன் அவ்வளவு
நிச்சயமாக நாளை சூரியன் மறையுமுன் என்னைக் கொன்று விடுவேன் என்று சொல்கிறான்? இது என்
மனதில் ஒரு கேள்வியை எழுப்புகிறது குருவே”
கேள்
சிந்து மன்னா
"அர்ஜுனன் உங்களுக்குப் பிரியமானவன் என்பதை எல்லோரும் அறிவோம், நீங்கள் எங்களுக்குக் கற்பிக்காத எதையும் அவனுக்குக் கற்பித்தீரா ? அவன் நம்பிக்கையின் பின்புலம் என்ன ?"
"நான் ஒரு ஆசிரியனாக பேதமின்றியே என் கடமையாற்றினேன் ஜயத்ரதா . ஆனால் நீ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. கற்பிப்பவனால் மட்டும் கல்வி சிறப்பதில்லை. கற்பவன் பங்கு மிக அதிகம்"
"அர்ஜுனனைக் கொண்டாட நீர் என்றும் தவறியதில்லை"
"இல்லை. உண்மையை உரைக்கிறேன். கல்வியில் பயிற்சியும் விடாமுயற்சியும் இன்றியமையாதவை. அது சொல்லிக் கொடுத்த பாடத்தை உறுதிப் படுத்தும். கல்வியின் வலிமையைப் பதின்மடங்காகும். பயிற்றுவிக்கும் நேரம் முடிந்ததும் நீங்கள் அனைவரும் விளையாடவோ உண்ணவோ உறங்கவோ செல்வீர்கள். அர்ஜுனன் உறங்காமல் உண்ணாமல் பயிற்சி செய்தான். நான் சொல்லிக் கொடுத்ததற்கு மேலும் பரிசோதனை முயற்சிகள் செய்தான். ஒளியின்றி உண்ண முடியுமானால் ஏன் விற் பயிற்சி முடியாது என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு இரவு முழுதும் ஒலி கொண்டு மட்டும் தாக்கும் பயிற்சி மேற்கொண்டான். அதை மற்றவர்கள் கற்க இயலவே இல்லை. ஒரு இலக்கை அவனிடம் காட்டினால் அந்த இலக்கு தவிர வேறொன்றும் அவன் கண்களுக்குத் தெரியாது. அப்படி மனம் குவிக்கும் ஆற்றல் பெற்றவன் எளிதில் யாரையும் வெல்வான். இது இயற்கையின் நியதி. நான் அவனை பாராட்டியது நீங்களும் அப்படி முனைப்போடிருக்கத்தான். ஆனால் நீங்கள் முயற்சியை விட்டுப் பொறாமைப் பட்டீர்கள்."
இவை மட்டும் அவனை எல்லோரையும் விடப் பெரிய வீரனாக்கி விடுமா
இன்னொன்றும் உண்டு மன்னா. அதுதான் தவம். கடினப் பயிற்சியும் கஷடமான தவமும் அவனுக்கு இறையருளைக் கொண்டு சேர்த்திருக்கின்றன. சாட்சாத் பசுபதி அவனுக்குப் பாசுபதம் வழங்கியிருக்கிறார். மகாதேவரோடு மல்யுத்தம் செய்து மீண்டிருக்கிறான். இறை ஸ்பரிசம் கொண்டவன் அவன். எவ்வளவு பெரிய பாக்கியம்.. நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சீடன் கிடைக்க மாட்டான் . வீரமும் அருளும் அறமும் அவன் பக்கம். அவன் நம்பிக்கை எனக்கு வியப்பே இல்லை."
நானும்தானே தவம் செய்தேன்
நீ செய்த தவத்தின் பின்னணி என்ன ? பாஞ்சாலியைத் தொடப்போய் அவமானப்பட்டு அதற்குப் பழி வாங்கத் தவம் செய்தாய். அப்படியும் அர்ஜுனன் ஒருவனைத் தவிர மற்றவர் அனைவரையும் ஒரு நாள் தோற்கடிப்பாய்
என்ற வரம் தானே கிடைத்தது. தவம் மகத்தான விஷயம்தான் மன்னா. ஆனால் தவம் செய்யும் நோக்கம் உன்னதமாக இருத்தல் வேண்டும். தர்மத்தின் பின்னணியில் செய்த தவம் அர்ஜுனனுக்குப் பாசுபதம் அளித்தது.
அப்படியாயின் நாளை என் மரணம் நிச்சயம்தானா? நான் ஏன் இன்றே போர்க்களம் விட்டுப் போகக்கூடாது?
அதைச் செய்தால் உன் குரு தக்ஷிணை திருப்பித் தரப்படும் சிந்து மன்னா என் சீடர்கட்கு நான் கோழைத் தனத்தைச் சொல்லித்தரவில்லை.
நான் கோழையல்ல ஆச்சார்யரே. ஆனாலும் என் மரணம் அந்தக் குழந்தையின் கொலைக்குப் பழியாக விளைவதை நான் விரும்பவில்லை. எப்படியும் வானும் நிலவும் உள்ளவரை அபிமன்யு வதம் பேசப்படும். என் மரணமும் அதனோடு பேசப்படுவதை நான் தவிர்க்க விழைகிறேன்
நீ கோழையல்ல என்பதை அறிவேன் அரசே. துரோணனின் சீடன் நிச்சயம் கோழையல்ல. ஆனால் நீ ஏற்கெனவே முடிவாகி விட்ட ஒரு விஷயத்தை மாற்ற முயல்கிறாய் அதை தடுக்கிறேன்
என்ன சொல்கிறீர்
நீங்கள் எல்லோரும் போரிடுகிறவர்களை வைத்து இந்தப் போரின் முடிவைக் கணிக்கிறீர்கள். அந்த முட்டாள் துரியோதனனும்தான். ஆனால் போரிடாத ஒருவன் இருக்கிறான். அவனே இப்போரின் முதலும் முடிவும். அவன் எண்ணமே நடக்கும்.
யாரவன்
இந்தக் கேள்விக்கு விடை உன்னீடம் இருந்தால் உன் கேள்வியை ஏந்தி நீ இங்கு வந்திருக்க மாட்டாய்
இதை மட்டும் உணர்ந்து கொள் எல்லாமே முன்னமே தீர்மானிக்கப் பட்டவை . உன் மரணமும் என் மரணமும் எல்லாம். நம் யாருக்கும் நேரடிப் போரில் நல்ல மரணம் கிடைக்கப் போவதில்லை
நீர் என்ன
குற்றம் செய்தீர்
ஆச்சார்யரே? அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமானதைச் சொல்கிறீரா ?
இல்லை.
அது நான் செய்த வேறொரு குற்றத்தின் விளைவுதான். ஒரு பெரிய தவறு செய்யும்போது அது மற்ற பல தவறுகளுக்கு அடிகோலி விடும் . இங்கும் அதுதான்
நடந்தது
வேறென்ன குற்றம்
அந்தண நெறியினின்றும் விலகினேன். ஆசையின்றி ஞானம் தேடிப் பிறர்க்குக் கற்பிக்கும் உன்னதமான குலாச்சாரத்தை நீங்கிப் பகட்டான வாழ்க்கை என் மகனுக்கு வேண்டும் என்று விழைந்தேன். அதற்காக என் வித்தையை அரண்மனைக்கு விற்றேன். தின்ற உப்பினால் கட்டுண்டேன். அபிமன்யுவைக் கொல்லும் நிர்பந்தத்திற்கு ஆளானேன். பின்புறமாக ஆயுதப் பிரயோகம் செய்யுமாறு கர்ணனைக் கேட்கும் மஹா பாவத்தைச் செய்ய வேண்டியதாயிற்று ஆடம்பர வாழ்க்கைக்காகக்
குல தர்மத்தை விட்டேன். என்னால் அந்தணம் பிழை பட்டது. நாளை என்னைப் போல் பலர் இதைச் செய்வர் . ஒரு நெறி பிறழ்தலுக்கு நான் முன்னோடி ஆகி விட்டேன் . இது மிகப் பெரிய குற்றம்.
அப்படியென்றால்
என் குற்றமென்ன ?
க்ஷத்ரிய
தர்மத்திலிருந்து விலகின குற்றம். ஒரு மன்னனுடைய கடமை அறம் பேணுதல். அறத்தின் பக்கலில்
நின்று போர் செய்தல். குடிகளைக் காத்தல் இன்று கௌரவப் படையிலுள்ள யாரும் அறத்தின் பக்கம் என்று சொல்லிக் கொள்ள முடியாது.
மகானாகிய பீஷ்மர் கூட. அதனால்தான் அவருக்கும் நேரடிப் போரில் நல்ல மரணம் கிட்டவில்லை.
எல்லாமே முன் கூட்டித் தீர்மானிக்கப் பட்டதென்றால்
இதில் நம் குற்றமென்ன
இல்லை. நம் செயல்களில் இறைவன் குறுக்கிடுவதில்லை.
இன்றைய நம் நிலையை நம் செயல்களே தீர்மானித்தன. நாம் இப்போது நேரிடுவது நம் செயல்களின்
விளைவுகளையே
நம் செயல்களே விற்கள். அவை விளைவென்னும் இலக்கை நோக்கி நம்மைச் செலுத்துகின்றன . விற்களைச்
செய்த நாம் அம்புகளாகிறோம். அவற்றினின்றும்
தப்ப முடியாது
எதைச் செய்தாலும் விளைவுண்டல்லவா. நம் செயலின் விளைவே நாமென்றால் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியுமா.
இப்போரில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா . விலகவும் கூடாது என்கிறீர்களே .புரியவில்லை.
இதற்கு மேல் என்னால் விளக்க இயலாது. நான் கிருஷ்ணனும் இல்லை. நீ அர்ஜுனனும் அல்ல
என் கேள்விக்கு விடையென்ன? என்னை விடப் பார்த்தன் பெரிய வீரன் என்றே கொண்டாலும் நாளை அஸ்தமனத்திற்குள்
கொல்வது சாத்தியமா
நான் ஏற்கெனவே கூறினேன். நீங்கள் பார்த்தனை மட்டும்
காண்கிறீர்கள். சில சமயம் போராளியை விடத் தேரோட்டி முக்கியமாகி விடுவதுண்டு
நீங்கள் கிருஷ்ணனைச் சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.
அதனால் என்ன
நான் அதிகம் கூற இயலாது மன்னா! ஒரு க்ஷத்ரியனாக வீர மரணம் அடையத் தயாராய் இரு. ஒன்று
மட்டும் சொல்கிறேன். நாளை சூரியன் இருக்கும்போதே மறைந்து விடும். மறைந்தாலும் இருக்கும்.
அப்படியென்றால்
நாளை களத்தில் காண்போம் அரசே . உறங்கச் செல்
அவன் திரும்பி நடந்தான். இரண்டு விஷயங்கள் புரிந்து
விட்டன. நாளை அவன் மரணம் நிச்சயம். அம்பு என்பது அவன் தூணியில் உள்ளது மட்டும் இல்லை.
அவனும்தான். எல்லோரும்தான்.
Labels: என் சிறுகதைகள்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home