என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள்:
திரு. பாலகுமாரன்
பாலகுமாரனை நான் முதலில் படித்தது அவரது "கெட்டாலும் ஆண் மக்கள்". குமுதத்தில் பிரசுரமான சிறுகதை. சற்றே ஆண்களின் பக்கம் சாய்ந்த கதை என்று சிலர் அபிப்ராயப்பட்டாலும் நிஜத்தில் ஷ்யாமளிக்கு (கதையின் நாயகி) நெருக்கமான குணமுள்ள பெண்களைச் சந்தித்திருக்கிறேன். முதலில் என்னைத் தாக்கியது அவர் நடை.
"என் ரத்தத்தில் மூர்க்கமில்லாமலில்லை . என் பாணி வேறு; சீதம்ம மாயம்ம என்று நெகிழ்ந்து
முழு நேரக் கச்சேரி மாதிரி அமையணும் எனக்கு"
அடுத்தது மெர்குரிப் பூக்கள். சிம்சன் நிறுவன வேலை நிறுத்தத்தை பின்புலமாக கொண்டு எழுதிய கதை. இந்த ஆள் வாழ்க்கையை அனுபவித்து எழுதுகிறவர் என்பது அந்த எழுத்தின் பீறிடும் வேகத்தில் புலனாகியது. " கறித் துண்டுகளை ஒதுக்கி வைத்து விட்டு பிரியாணி முழுவதையும் ஒரு பருக்கை விடாமல் ஆவலுடன் கோபாலன் சாப்பிட்டான்... டீ யின் சூடு இதமாய் நெஞ்சு முழுதும் பரவியது. அம்மா உலகில் யாரும் பசியோடிருக்கக்கூடாது " வன்முறையைச் சொல்வதிலும் அவர் பாணி தனி. " ஸ்டிலட்டொவை வாகாய்க் கையில் ஏந்தி அறிவுக்கரசன் தொண்டையில் இறக்கினான். பஞ்சுப்பொதியில் இறங்குவது போல் அது அறிவுக்கரசன் நெஞ்சுக் குழியில் இறங்கியது"
கதை சொல்லும்போது திடீரென விலகி ஒரு பாத்திரத்தின் சிந்தனையாய் ஒரு ஸ்லோகமோ ஒரு தமிழ்ச் செய்யுளோ கவிதையோ வரும். சொல்ல வருகிற விஷயத்தை மிக வசீகரமாய்ச் சொல்லும் உத்தி இது. என்னை மிகக் கவர்ந்த விஷயம். இன்றும் நான் ஏதாவது எழுத முற்பட்டால் பாலகுமாரன் பாணி என்னை ஆக்ரமிக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டு அதிலிருந்து விலகி எழுத வேண்டி வரும். நான் ஒரு பெரும் எழுத்தாளன் என்று சொல்லும் முயற்சியல்ல இது. பாலகுமாரனின் பாதிப்புக்கு ஒரு உதாரணம். அவ்வளவே.
பிறகு இரும்பு குதிரைகள் : வன்முறையும் பிறன்மனை விழைவும் சொன்ன பாலகுமாரன் வேதாந்தம் சொன்ன நாவல் இது. வாழக்கையை அதன் இயல்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பாலகுமாரன் கிட்டத்தட்ட ஈசோபநிஷதத்தின் சாரம் சொல்கிறார். இது இலக்கியச் சிந்தனை விருது பெற்ற நாவல். அதற்கு மேலேயும் தகுதி இந்நாவலுக்கு உண்டு.
எல்லாவற்றையும் விட முக்கியம் ஒரு நல்ல கணவனாய் குடும்பத்தலைவனாய் இருக்க வழி காட்டியவை அவர் எழுத்துக்கள். என் குடும்ப வாழ்க்கை ஆரம்பித்த போது சர்வ நிச்சயமாய் என்னைக் கைப் பிடித்து அழைத்துச் சென்றது அவர் எழுத்து.
பாலகுமாரனிடம் பாசாங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. என்னளவில் இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. வாழ்க்கை ஒரு ஆன்மாவின் பயணம். யானையைப் பார்த்த குருடன் போல் நம் பரிணாம வளர்ச்சிக்கு எட்டிய வரையே நாம் வாழ்க்கையை உணர்கிறோம். இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் நிற்கிறார்கள். நம் கட்டத்தில் நின்று கொண்டு அடுத்த கட்டத்தில் இருப்பவரைப் புரிந்து கொள்ள இயலாது.
பெண்களின் மீதான அடக்குமுறை குடும்பம் என்ற அமைப்பை உடைக்கும் என்று ஆணித்தரமாகச் சொன்னவர் பாலகுமாரன். இன்று ஆணாதிக்கம் என்ற நீர்க்குமிழி உடைந்து விட்டது. கல்யாணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஆண்கள் இன்று அலைகிறார்கள். கல்வியும் பொருளாதார சுதந்திரமும்பெண்களுக்குத் துணிவைக் கொடுத்துள்ளன. ஆண் துணையின்றி வாழ முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும் பெண்களுக்கு இன்று வந்திருக்கின்றன.
இ[ப்படி ஒரு காலம் வரும் என்று எச்சரித்தவர் பாலகுமாரன்.
இரும்பு குதிரைகள் நாவலில் மாலனின் ( முன்னுரை) வரிகள் இவை :
" மரபு பேசாமல் குதர்க்கம் பேசிச் சிரிக்காமல் ஒரு விளக்கை ஏற்றியிருக்கிறாய். இதற்காக ஒரு தலைமுறை உனக்குக் கடன் பட்டிருக்கிறது"


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home