Tuesday, August 7, 2012

என் கவிதைகள்


ஆண்டுகள் நொடிகளாய்.......

எண்ணம் போல் மணமுடித்தேன் எண்ணியவளைக் கரம் பிடித்தேன்
பண்டைய நல் வினை பல கோடி இருத்தல் வேண்டும் – இன்றேல்

நாடிய பலருக்கும் கிட்டாத உன் சுயம்வர மாலை
கோடியில் ஒருவனாய் எனக்குக் கிட்டியிருக்குமா

ஆண்டுகள் நொடிகளாகும் அற்புதம் கண்டேன்
வேண்டிய வாழ்க்கை வரமாய்க் கிட்டியதால்

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே துணையாய் வேண்டும்
சற்றும் பிரியாமல் கண்ணன் அருளல் வேண்டும்

பொருளே தாரம் என நானும் எண்ணியதில்லை
பொருளாதாரத்தைப் பற்றி மட்டும் நீயும் சிந்தித்ததில்லை

கோடிகள் நம்மிடம் இருந்ததில்லை; நம்மை
நாடி வந்தவர் வெறுமே சென்றதில்லை

பயமறியாமல் வாழ்க்கையை நான் வாழக் காரணம்
சுயமழித்து என்னை நீ முன்னிருத்தியதே

விடலையாய் இன்றும்  நான்  எண்ணி விகசிப்பது - என்
மடலை வாசித்து உன் சம்மதம் சொன்னதை

என் தேடலால்  நான் வேகம் கொண்ட போழ்தில்
அன்பென்ற கடிவாளம் கொண்டு வழி நடத்தினாய்

நண்பனாய் மந்திரியாய் என் வாழ்வின சாரதி நீ
கண் போல் வளர்த்த அன்னை; நல்லாசிரியை நீ

மோகம் என்னும் கங்கை என்னுள் பெருகும் அதன்
வேகத்தைக் காதலால் வாங்கும் சங்கரன் நீ

வாழ்வெனும் போர்க்களத்தில் நான்; மனம்
தாழ்வுறாமல் என்னை எனக்குணர்த்திய கண்ணன் நீ

காமத்திலிருந்து காதலுக்கு இட்டுச் செல்லும் சரஸ்வதீ
ஆம்; நீயே என் வாழ்வெனும் வேள்வித் தீ

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home