Monday, August 6, 2012

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள்:


திரு ஜெயகாந்தன்:

பதினாறு வயதில் திரு ஜெயகாந்தனைப் படிக்கத் தொடங்கினேன். முதல் முழு நாவல் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" பிறகு "சில நேரங்களில் சில மனிதர்கள்" . சி. நே. சி. ம படித்த பிறகு எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் பல. 
"என்னமாய் எழுதுகிறார் இவர் " என்று சிலாகிப்பு. திரும்பத் திரும்பப் படித்தேன் அந்த நாவலை. பெண்கள் பற்றியும் ஆண்  பெண் உறவுகள் பற்றியும் நட்பு பற்றியும் கனவு கலந்த எதிர் பார்ப்புகள் நிறைந்த  இளமைப் பருவம். உறவுகளில் நேர்மை, குறிப்பாக ஆண் பெண் உறவுகளைக் கையாளும் விதம் பற்றித் தெளிவு கொடுத்து  பெண்களிடம் 'வழியாமல்' காத்த புத்தகம். ஒவ்வொரு இளைஞனும் படிக்க வேண்டிய வேதம்.   

திரு ஜெயகாந்தன் அவர்களை ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு கம்யூனிஸ்ட்டாக அனைவரும் அறிவர். அதனால் அவரை ஒரு சிவப்புச் சிந்தனையாளர் என்று கட்டம் கட்டி விட முடியாது. கம்யுனிசச் சிந்தனைகள் 
அவர் எழுத்தில் இருக்கும். ஆனால் அதை விட அதிகமாக சமூக அக்கறை இருக்கும். அந்தண வகுப்பைச் சேர்ந்த பல எழுத்தாளர்களை விட அந்த சமூகத்தைப் பற்றி அதிகம் எழுதியவர் என்று கூடச் சொல்லலாம். ப்ராம்மண்யம்  பற்றிய அவரது அறிவு எனை பலமுறை  பிரமிக்க வைத்திருக்கிறது.  பிராமணியத்தின் மேல் அவரது மரியாதை மிக அதிகம். உயர்ந்ததொரு வாழ்க்கை முறை இன்று சரியாகப் புரிந்து பின் பற்றப்படவில்லை என்பது அவரது வருத்தம்;இது அவரது  பல சிறு கதைகளில் வெளிப்படுவதுண்டு. அவரை ஒரு நாத்திக வாதியாக என்னால் என்றும் பார்க்க முடிந்ததில்லை - அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தும் கூட. அவரது "பகவான் இல்லையே  பக்தர்தானே" என்ற சிறு கதையைப் படிப்பவர்கள் அவருக்குள் இருக்கும் ஆன்மீக வாதியை  அறிந்து கொள்ளலாம் .
பகவத் கீதையைப் படித்து ஓரளவு அதை  அறிந்தவர்கள் ஜெயகாந்தனின் எழுத்தில் கீதையின் பல படிமங்களைப் பார்க்கலாம். இன்னும் சொல்லப் போனால் அவரது பல சிறுகதைகள் கீதையின் விளக்கவுரைகள்  என்று கூடச் சொல்வேன். இதை உணர வேண்டுமானால் அவரது   "அக்ரஹாரத்துப் பூனை" படித்துப் பாருங்கள். ஆனால் அதற்கு முன் பகவத் கீதையைப் படியுங்கள். கீதையின் பரிச்சயம் இல்லாவிடில் ஜெயகாந்தன் எழுத்துக்களின் பரிமாணம்
புரியாது. 

சாஹித்ய அகாடமி விருது அவருக்குக் கிடைத்த போது எனக்கே கிடைத்தது போல் ஒரு மகிழ்ச்சி. அவரால் அந்த விருது கெளரவம் பெற்றது என்பதே  உண்மை. நன் கத்தரில் இருந்த போது அவருக்கு ஒரு பாராட்டு விழ எடுக்க வேண்டும்  என்று  ப்ரேரேபித்தேன்.  நான்  இருந்த வரை நடக்கவில்லை. என் கத்தார் தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து ஒரு முறை ஜெயகாந்தனை அழைத்து உங்கள் குழந்தைகளுக்கும் அடுத்த தலை முறைக்கும் அறிமுகம் செய்யுங்கள். நம் குழந்தைகளுக்கு  நாம் இதைச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். 

ஒரு முறை தி. ஜானகிராமன் எழுத்தைப்  பற்றி ஜெயகாந்தன் விமர்சனம் செய்தார். ஜானகிராமனிடம் கருத்து கேட்ட  போது  அவர் சொன்னாராம்; " நான் ஒரு எழுத்தாளன்தான்; ஆனால் ஜெயகாந்தன் ஒரு பிறவி ஞானி. அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்."


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home